தலைப்புச் செய்திகள்

“எனது கடிதம் எவ்வாறு கசிந்தது”?: விசாரண நடத்துமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை

குற்றப் புலனாய்வு பிரிவுக்கு (சிஐடி) தான் அனுப்பிய கடிதம், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பு – எவ்வாறு கசிந்தது என்பதை விசாரிக்குமாறு, சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ‘தி சண்டே டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சாரதியைக் கடத்திச் சென்று, ஆதாரங்களை அழித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை விடுவிக்கும் தனது முந்தைய உத்தரவை இடைநிறுத்துமாறு, நீதிமன்றுக்கு அறிவிக்கும்படி குறிப்பிட்ட கடிதத்தில் சட்ட மா அதிபர் உத்தரவிட்டிருந்தார்.

குறித்த கடிதம் கசிந்தமை சட்டமா அதிபர் துறையை அவமானப்படுத்தும் நோக்கில் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து சட்டமா அதிபர் ஏற்கனவே தனது கவலைகளை பதில் பொலிஸ் மா அதிபருக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். மேலும் நாளை (17) கடிதம் மூலம் முறையாகத் தெரிவிப்பார் என, தி சண்டே டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி 27 ஆம் திகதி – பிரேம் ஆனந்த உடலகம, டான் திஸ்ஸசிறி சுகதபால மற்றும் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் மீதுள்ள வழக்கு – இனி தொடர்ந்து கொண்டு செல்லப்படாது என்றும், அவர்களை வழக்கிலிருந்து விடுவிக்க முடியும் எனவும் சிஐடிக்கு சட்டமா அதிபர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து கடந்த 13ஆம் திகதியன்று, லசந்த விக்கிரமதுங்க கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களை விடுவிப்பதற்கான தனது முந்தைய உத்தரவை, சட்டமா அதிபர் ரத்து செய்ததாக கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு சிஐடி அறிவித்தது.