
இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 313,000 பெண்கள் கர்ப்பமாகிறார்கள் என்றும், ஆனால் இந்த கர்ப்பங்களில் கணிசமான எண்ணிக்கையிலானவை ஆரோக்கியமான பிரசவங்களை கொண்டிருப்பதில்லை புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்துகின்றன.
இலங்கை சமூக வைத்தியர்கள் கல்லூரியின் (College of Community Physicians) தகவலின்படி, கர்ப்பத்தின் முதல் சில மாதங்களுக்குள் கிட்டத்தட்ட 26,000 பெண்கள் தங்கள் கருக்களை இழக்கின்றனர். அதேவேளை, சுமார் 1,700 குழந்தைகள் 28 வாரங்களுக்குப் பிறகு கருப்பையிலேயே இறக்கின்றனர்.
கொழும்பில் உள்ள இலங்கை மருத்துவ சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், சங்கத்தின் தலைவர் – விசேட வைத்தியர் கபில ஜெயரத்ன; அதிகரித்து வரும் கர்ப்ப சிக்கல்கள், முன்கூட்டிய பிறப்புகள் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்களை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
குழந்தை இறப்பு
ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் சுமார் 280,000 குழந்தைகளில், கிட்டத்தட்ட 20,000 குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கின்றன. அதனால் பல குழந்தைகளுக்கு தீவிர மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, பல்வேறு உடல்நல சிக்கல்களால் சுமார் 2,500 குழந்தைகள் தங்கள் முதல் வருட வாழ்க்கையை வாழவில்லை என்றும் டொக்டர் கபில ஜெயரத்ன கூறியுள்ளார்.
இதன்போது இலங்கையில் தற்போதைய குழந்தை இறப்புகளுக்கான முக்கிய காரணங்களையும் டொக்டர் கபில ஜெயரத்ன விவரித்தார். அவை;
பிறப்பு குறைபாடுகள் (46%)
முன்கூட்டிய பிறப்பு (26%)
பிறப்பு மூச்சுத்திணறல் (12%)
புதிதாகப் பிறந்த குழந்தை தொற்றுகள் (6%)
மேலும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தை இறப்புகளைக் கருத்தில் கொள்ளும்போது, இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 3,300 ஆக உயர்ந்து வருகிறது.
பிறப்பு விகிதங்கள் குறைந்து வருதல் மற்றும் இறப்புகள் அதிகரித்து வருதல்
இலங்கை பிறப்பு விகிதங்களில் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது. 2019 இல் பிறப்பு 319,000 ஆக இருந்தது. 2023 இல் 247,000 ஆகக் குறைந்துள்ளது. இது 22-23% குறைவைக் குறிக்கிறது. அதே நேரத்தில், அனைத்து வயதினரிடையேயும் ஒட்டுமொத்த இறப்பு எண்ணிக்கை 2020இல் 132,000 ஆக இருந்து 2023 இல் 181,000 ஆக உயர்ந்துள்ளது.
இந்த சவால்கள் இருந்தபோதிலும், நாடு சுகாதாரப் பராமரிப்பில் முன்னேற்றம் கண்டுள்ளது. 1950 களில் ஆண்களின் ஆயுட்காலம் 53-56 ஆண்டுகளில் இருந்து இன்று 73 வயதாக அதிகரித்துள்ளது. பெண்களின் ஆயுட்காலம் 80 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது என்றும் அவர் விவரித்தார்.
அதிகரித்து வரும் குழந்தை தற்கொலைகள் மற்றும் சமூக ஊடகங்களின் பங்கு
குழந்தை தற்கொலைகள் தொடர்பாக ஒரு கவலைக்குரிய போக்கு உருவாகியுள்ளது. 2022இல் 133 குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டதாக பதிவுகள் கூறுகின்றன. மேலும் 2023இல் அது 270 சம்பவங்களாக அதிகரித்துள்ளது. இதற்கு சமூக ஊடகங்களின் எதிர்மறையான தாக்கம் ஓரளவு காரணம் என்று நிபுணர்கள் கூறுவதோடு, ஒன்லைன் தீங்கிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க விதிமுறைகளை கோருகின்றனர்.
சமூக ஊடகங்களின் அபாயங்கள் மற்றும் நன்மைகளை மதிப்பிடுவதற்கான விசாரணைகள் நடந்து வருவதாகவும். விரைவில் சட்டமியற்றுபவர்களுக்கு பரிந்துரைகள் வழங்கப்பட உள்ளதாகவும் டொக்டர் ஜெயரத்ன தெரிவித்தார்.
இதையும் பாருங்கள்



