
உலகளவில் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை 2040 ஆம் ஆண்டுக்குள் 30 மில்லியனை எட்டும் என்று சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தொற்றுநோயியல் தலைமை நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர இது தொடர்பாக கூறுகையில், ‘புற்றுநோய்’ என்பது ஒரு நோய் அல்ல, மாறாக உடலில் அசாதாரண செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளரும்போது ஏற்படும் – தொடர்புடைய நோய்களின் குழு என்றார்.
தொற்று நோய்கள் குறைவடையும் நிலையில், புற்றுநோய் உட்பட தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள், ஆரோக்கியமற்ற உணவு முறை, புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் புற்றுநோய் ஏற்படலாம் என்று அவர் எச்சரித்தார்.
இதேவேளை, 2021 ஆம் ஆண்டில், இலங்கையில் 37,753 புற்றுநோயாளர்கள் இருந்தனர் என்றும் அவர்களில் 17,582 ஆண்களும் 20,171 பெண்களும் கண்டறியப்பட்டதாகவும் சமூக மருத்துவ ஆலோசகர் டொக்டர் ஹசரலி பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஒரு நாளில் 104 புதிய புற்று நோயாளிகள் அடையாளம் காணப்படலாம் என்று கூறிய அவர், ஆண்களில் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோய்களாக வாய் புற்றுநோய் (2687 பேர்), நுரையீரல் புற்றுநோய் (1,540 பேர்) காணப்படுவதாகவும், பெண்களிடையே அதிக எண்ணிக்கையில் மார்பக புற்றுநோய் (5,485) காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
2022 ஆம் ஆண்டில், உலகளவில் 19.9 மில்லியன் புற்றுநோய்கள் பதிவாகியுள்ளன, அதில் 10 மில்லியன் இறப்புகள் புற்றுநோயால் ஏற்பட்டன.
புற்றுநோய் அபாயங்களைக் குறைப்பதற்கும் உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் ஆரம்பகால கண்டறிதல் வேண்டும் என்றும், வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தினர்.
இதையும் பாருங்கள்



