
அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ராமநாதன் லோச்சனா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், அதில் தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன ராமநாதன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் இன்றைய தினம் (22) அறிக்கை அளித்த பின்னர் – ஊடகங்களிடம் பேசிய அர்ச்சுனா எம்.பி; ராமநாதன் லோச்சனா என்ற நபரை அதிகாரிகள் தேடி வருவதாகக் கூறினார்.
“அது நான் அல்ல. நீதிமன்றுக்கு ராமநாதன் லோச்சனா என்று தெரியப்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறிய அவர்; வழக்கு தொடர்பான தகவலுக்கு தனது சமூக ஊடக வீடியோவைப் பார்க்குமாறு ஊடகவியலாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
பொலிஸாருக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை அடையாளம் காண முடியவில்லை என்றும், ஒரு சம்பவத்தில் தொடர்புடைய நபரின் சரியான பெயரைப் பதிவு செய்யத் தவறிவிட்டார் என்றும் – பொலிஸாரை விமர்சித்து பேஸ்புக்கில் பதிவொன்றை அர்ச்சுனா எம்.பி இட்டுள்ளார்.
ரம்பேவா பகுதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டி, யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மீது வழக்குத் தொடரப்பட்டதை அடுத்து, அவர் இன்று அனுராதபுரம் நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவின்படி, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் வாகனத்தில் அங்கீகரிக்கப்படாத விஐபி விளக்குகள் பொருத்தப்பட்டிருந்ததால், அந்த வாகனத்தை போக்குவரத்துப் பொலிஸார் நிறுத்தினர்.
அப்போது போக்குவரத்து விதிமீறல் குறித்து போக்குவரத்து பொலிஸார் அவரிடம் விளக்க முயன்றபோது, அவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் திட்டியதோடு, கடமைக்கு பொலிஸாரின் கடமைக்கு ஒத்துழைக்க மறுத்ததாக, அவர் மீதுஅனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேக நபரைக் கண்டுபிடிக்க முடியாததால், பெப்ரவரி 03 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு மனுவின் மூலம், ராமநாதன் லொச்சனாவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தனது சாரதி அனுமதிப் பத்திரத்தில் அர்ச்சுனா ராமநாதன் என்ற பெயர் இருப்பதாகவும் அர்ச்சுனா எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.
பின்னர் சரியான சந்தேக நபரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.




