தலைப்புச் செய்திகள்

நிசாம் காரியப்பர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க, உச்ச நீதிமன்றம் திகதி குறிப்பு

நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சிறப்பு ஏற்பாடுகள் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, இந்த மாதம் 24ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனுவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தாக்கல் செய்துள்ளார்.

மேற்படி மனுவை இன்று (22) நீதியரசர்களான யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

குறித்த மனுவின் சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக எதிர்வரும் 24 ஆம் திகதி வழக்கை அழைப்பதற்கு நீதிமன்றம் இதன்போது தீர்மானித்தது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கோரப்பட்ட வேட்புமனுக்களை ரத்து செய்யும் நோக்கத்துடன் – கடந்த அரசாங்கம் இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்துள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தில் உள்ள சில விதிகள், மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதிக்கின்றது என்றும் இது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் எனவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, குறித்த சட்டமூலத்தில் உள்ள சர்ச்சைக்குரிய சரத்துக்கள் நிறைவேற்றப்பட வேண்டுமானால், அவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என தீர்ப்பளிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.