தலைப்புச் செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நன்றி தெரிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்துளளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவரின் ஓய்வின் பின்னர் அரசு வழங்கும் வீட்டை ஏற்காமைக்காகவே, ஜனாதிபதி தனது நன்றியை கூறியுள்ளார்.

சிரச தொலைக்காட்சியின் சட்டன நிகழ்சியில் கலந்து கொண்டு பேசிய போதே,, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஆடம்பரமான வீடுகளை வழங்குவதற்காக அரசு கணிசமான நிதியை செலவிட வேண்டியுள்ளமையை இதன்பொது ஜனாதிபதி விபரித்தார். இது வரி செலுத்துவோர் மீது நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளமையினையும் அவர் சுட்டிக்காட்டினார்.

”முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மாதத்திற்கு 02 மில்லியன் ரூபாய் வாடகை மதிப்புடைய அரசுக்குச் சொந்தமான வீட்டில் வசிக்கிறார். அதேபோல், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாதத்திற்கு 09 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டில் வசிக்கிறார்” எனவும் இதன்போது அனுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீடு தொடர்பான தனது முந்தைய கருத்துக்களையும் ஜனாதிபதி இதன்போது மீண்டும் வலியுறுத்தினார். இது மாதத்திற்கு 46 லட்சம் ரூபாய் வாடகை மதிப்பிலான வீடு என்றும், அந்த வீடு அமைந்துள்ள இடம் ஒரு ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்டுள்ளது என்றும் அவர் விபரித்தார்.

இருப்பினும், இத்தகைய சலுகைகளை முன்னாள் ஜனாதிபதிகள் சிலர் கை விட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச வீட்டை ஏற்கவில்லை என்று கூறிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார். அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமீபத்தில் தனது அரச இல்லத்தை ஒப்படைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாசவும் சிறிது காலத்திற்கு முன்பு தனது உத்தியோகபூர்வ இல்லத்தை திருப்பித் தந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரசாங்கம் வழங்கிய வீடுகள் திரும்பப் பெறப்படுமா என்பது குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, அரசியல் பிரமுகர்களுக்கான தேவையற்ற செலவினங்களைக் குறைப்பதற்கான தனது நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.

தனக்குக் கிடைத்த பொது ஆணை, அத்தகைய சலுகைகளை மட்டுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு வளங்களை திருப்பிவிட வேண்டும் என்பதற்காகவே வழங்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.