தாஜுதீன் கொலை: ஒரு மாதம் கடந்தும், சி.சி.ரி.வி. காட்சிகள் ஆய்வுகளுக்கு அனுப்பப்படவில்லை

🕔 February 16, 2016

Thajudeen - 012பிரபல ரக்பி வீரர் தாஜுதீன் கொலை தொடர்பான சி.சி.ரி.வி. காட்சிகள் அடங்கிய இறுவட்டுக்களை, ஆய்வுகளுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு மாதம் கடந்து விட்ட நிலையிலும்,  அவற்றினை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்னும் நீதிமன்றத்தில் வைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வசீம் தாஜுத்தீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் வாகனமொன்றில் பயணிப்பது சி.சி.ரி.வி. கமெராவில் பதிவாகியுள்ளது. ஆயினும், அந்தக் காட்சி தெளிவின்மை காரணமாக, வசீம் தாஜுதீன் பயணித்த வாகனத்தினை அடையாளம் காண முடியாமல் உள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த காட்சிகள் அடங்கிய இறுவட்டுக்களை ஆழமான ஆய்வுகளுக்காக வெளிநாட்டு தடயவியல் பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பி வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் – குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கடந்த ஜனவரி மாதம் 07 ஆம் திகதி உத்தரவு வழங்கினார்.

ஆயினும், இதுவரை குறித்த இறுவட்டுக்கள் வெளிநாட்டு பரிசோதனைகளுக்கு அனுப்பப்படாமல், நீதிமன்றத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, நீதிமன்ற உத்தரவுக்கிணங்க கொழும்பு பல்கலைக்கழக கணிணிப் பிரிவினரிடம், குறித்த காட்சிகள் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தன. ஆயினும், அந்தக் காட்சிகள் தெளிவற்றவையாக உள்ளமையினால், அவற்றில் பதிவாகியுள்ள வாகனத்தை அடையாளம் காண முடியவில்லையென, கொழும்பு பல்கலைக்கழக கணிணிப் பிரிவு தெரிவித்திருந்தது.

இதேவேளை, மேற்படி காட்சிகளை ஆழமான பரிசோதனைகளுக்காக வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்களான எப்.பி.ஐ. அல்லது ஸ்கொட்லான் யாட் பொலிஸாரின் ஆய்வுகூடங்களுக்கு அனுப்பி வைக்குமாறு, கொழும்பு பல்கலைக்கழக கணிணிப் பிரிவினர் சிபாரிசு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிணங்க, குறித்த காட்சிகள் அடங்கிய இறுவட்டுக்களை வெளிநாட்டு ஆய்வுகூடங்களுக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்