தலைப்புச் செய்திகள்

“நான் க.பொ.த சாதாரண தரம் எழுதவில்லை”: நாடாளுமன்றில் கல்வித் தகைமை ஆவணங்களை சமர்ப்பித்து பேசுகையில் சஜித் தெரிவிப்பு

திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச – தனது அனைத்து கல்விச் சான்றிதழ்களையும் இன்று (18) நாடாளுமன்றத்துக்கு வழங்கினார். அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் விடுத்த கோரிக்கையை அடுத்து – அவர் இவ்வாறு வழங்கினார்.

பாடசாலை மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் தொடர்பான கல்வித் தகைமைகளை முன்வைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சர் ஜயதிஸ்ஸ நேற்று சவால் விடுத்தார்.

அமைச்சருக்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அவரின் கல்வித் தகுதிகள் குறித்து இன்று (18) நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

தனது மாணவ பதிவுப் பத்திரங் முன்வைத்துப் பேசிய சஜித் பிரேமதாச, கொழும்பில் உள்ள புனித பிரிட்ஜெட்ஸ் கான்வென்ட்டில் தனது ஆரம்பக் கல்வியை தொடங்கி, செயின்ட் தோமஸ் பிரேரேட்டரிக்கும், பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் சென்றதாக தெரிவித்தார்.

தரம் 09க்குப் பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய தான், இலங்கையில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவில்லை என்றார்.

அதன் பின்னர் தான் ஐக்கிய ராச்சியத்தில் தனது கல்வியை தொடர்ந்ததாக தெரிவித்த சஜித் பிரேமதாச, தான் இங்கிலாந்தில் தனது சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றியதாக தெரிவித்தார்.

அவர் தனது சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையத் தவறியதாக வெளியான செய்திகளை மறுத்த எதிர்க்கட்சித் தலைவர், தனது இங்கிலாந்து கல்வி தொடர்பான பாடசாலை கல்வி ஆவணங்கள் உட்பட தனது இங்கிலாந்து தகுதிகளை சமர்ப்பித்தார்.

மேலும், தான் பட்டப்படிப்பைத் தொடர்ந்த லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் (LSE) பெற்ற பட்டதாரி சான்றிதழையும் இதன்போது காண்பித்தார்.

தான் அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழக கல்லூரியில், பொது முகாமைத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்றும், பிரதமர் ஹரினி அமரசூரிய விரிவுரையாளராக இருந்த திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்றத்தின் முதல் சபாநாயகர் அசோக ரன்வல ராஜினாமா செய்தமையினை அடுத்து – அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதிகள் தொடர்பான அண்மைய சர்ச்சைகளுக்குப் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதிகள் கவனத்திற்குரியன.