தலைப்புச் செய்திகள்

வறிய மக்களுக்கு ஆதரவளிக்கும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து, மில்லியன் கணக்கான பணத்தைப் பெற்றுக் கொண்ட அமைச்சர்கள், எம்.பிகளின் பெயர்கள் அம்பலம்

ஜனாதிபதி நிதியத்தின் நோக்கத்திற்கு அப்பாற்பட்ட வகையில், முன்னாள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களின் வைத்தியச் சிகிச்சைக்காக – நிதியுதவியை பெற்றுக்கொண்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று (17) தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறிய மக்களுக்கு ஆதரவளிக்கும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து – பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியுதவிகளைப் பெற்றுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா நலிந்த ஜயதிஸ்ஸ சபையில் கூறினார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 11 மில்லியன் ரூபாயையும், ராஜித சேனாரத்ன 10 மில்லியன் ரூபாயையும், முன்னாள் அமைச்சர் அலிக் அலுவிஹார 2.2 மில்லியன் ரூபாயையும், அவருடைய மகன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே 4.6 மில்லியன் ரூபாயையும், முன்னாள் பிரதமர் டி.எம். ஜயரத்ன 30 மில்லியன் ரூபாயையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா 18 மில்லியன் ரூபாயையும், முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கல் பெரேராவுக்கு 2.7 மில்லியன் ரூபாயையும், முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க 04 மில்லியன் ரூபாயையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க 03 மில்லியன் ரூபாயையும், நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்கிரமநாயக்க 1.5 மில்லியன் ரூபாயையும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பெற்றுள்ளனர்.

மேலும், மனோஜ் சிறிசேன, தயாசிறி ஜயசேகர, பி.ஹரிசன், பி. தயாரத்ன, மேல்மாகாண முன்னாள் முதலமைச்சர் இசுர தேவப்பிரிய பெரேரா, பியல் நிஷாந்த டி சில்வா ஆகியோரும் அண்மைய வருடங்களில் – ஜனாதிபதி நிதியத்திலிருந்து உதவிகளைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி நிதியச் சட்டத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரே ஜனாதிபதி நிதியத்தின் தலைவராக செயற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.