தலைப்புச் செய்திகள்

கலாநிதி விவகாரம்: சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தனது கல்வித் தகுதியின் நம்பகத்தன்மையை தெளிவுபடுத்தத் தவறினால், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவது குறித்து – பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பரிசீலித்து வருவதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பிரேரா இன்று (11) தெரிவித்துள்ளார்.

தான் சட்டபூர்வமான கலாநிதி பட்டம் பெற்றவரா என்பது குறித்து சபாநாயகர் அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். “அவரால் ஆதாரத்தை வழங்க முடியாவிட்டால் மற்றும் ராஜினாமா செய்ய வேண்டும். மறுத்தால், அவருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி – நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னெடுக்கும்” என்றும் அஜித் பி. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

நல்ல மனசாட்சியுடன் செயல்படுவார்கள் என்று தாங்கள் நம்பும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் சபாநாயகரை பதவி நீக்கம் செய்வதற்கு ஆதரவளிப்பார்கள் என்றும், அஜித் பி. பெரேரா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற இணையத்தில் சபாநாயகரின் பெயருக்கு முன்னாள் இடப்பட்டிருந்த ‘டொக்டர்’ எனும் சொல்லை நீக்கியமையினை அடுத்து, அவரின் டொக்டர் (கலாநிதி) பட்டம் தொடர்பான சர்ச்சை அதிகமானது.

சபாநாயகர் தனது கல்வித் தகைமைகளுக்கான ஆதாரங்களை வழங்குமாறு பொது மற்றும் அரசியல் தரப்புக்களிலிருந்து அழுத்தங்கள் அதிகரித்துள்ளன. ஆனால் தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள சபாநாயகர், தன்மீது அவதூறு பிரச்சாரம் செய்யப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பொது விவாதத்தையும் பொறுப்புக்கூறலையும் தொடர்ந்து எழுப்பும் இந்த விவகாரம் குறித்து அரசு எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.