தலைப்புச் செய்திகள்

காஸா தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் மரணம்?: சாத்தியங்களை ஆராய்வதாக இஸ்ரேல் படை அறிவிப்பு

மாஸ் தலைவர் யஹ்யா சின்வர் – இஸ்ரேலியப் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், சின்வர் கொல்லப்பட்டுள்ளமைக்கான சாத்தியங்களை ஆராய்ந்து வருவதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது.

இதேவேளை சின்வர் கொல்லப்பட்டாரா என்பதை அடையாளம் காணும் பணியில் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு முகவரகம் ஆகியவை, இஸ்ரேலின் உள் உளவுத்துறையுடன் இணைந்து ஈடுபட்டுள்ளதாக இஸ்ரேல் பொலிஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பொலிஸ் தடயவியல் ஆய்வகத்தில் சின்வருடைய பல்லின் படங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் டிஎன்ஏ சோதனை நடந்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸாவில் நடந்த தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டமைக்கான சாத்தியங்கள் அதிகரித்து வருவதாக, இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் இன்று (17) செய்தி வெளியிட்டுள்ளன.

காஸா பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படை மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, ​​மூன்று பேரை தாங்கள் கொன்றதாகவும், அதில் ஒருவர் யஹ்யா சின்வர் ஆக இருக்கலாம் என்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும், வருகின்றனர். இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

மேற்படி மூவரும் கொல்லப்பட்ட பகுதியில் பணயக்கைதிகள் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், அப்பகுதியில் செயல்படும் படைகள் தேவையான எச்சரிக்கையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன எனவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை கூறியுள்ளது.

இந்த நிலையில் ஸ்கை நியூஸ் அரபு ஊடகம் வெளியிட்ட ஒரு செய்தியில், பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, யஹ்யா சின்வரின் மரணம் உறுதி செய்யப்பட்டதாக, ஜரூசலம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

காசாவில் இஸ்ரேல் படைகளின் தாக்குதலில் குறிவைக்கப்பட்டவர்களில் ஒருவர் ஹமாஸின் கான் யூனிஸ் பிரிவு தளபதி ஆவார். போர் தொடங்கியதில் இருந்து சின்வருக்கு மிக அருகில் இவர் இருந்து வந்துள்ளார். அதனால் அந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் சின்வரும் ஒருவராக இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளது எனவும் இஸ்ரேலிய படை தெரிவித்துள்ளது.

காசாவில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய அதிகாரிகளிடமிருந்தோ அல்லது ஹமாஸிடமிருந்தோ அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை.