
– பாறுக் ஷிஹான் –
மீன் பிடிப்பதற்காக சென்ற பெண் ஒருவரை – முதலை இழுத்து சென்ற சம்பவமொன்று சொறிக்கல்முனை – புட்டியாறு பகுதியில் நேற்று (14) நடந்துள்ளது.
அம்பாறை மாவட்டம் – சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றை அண்டிய பிரதேசமான, சொறிக் கல்முனை – புட்டியாறு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரையே இவ்வாறு முதலை இழுத்துச் சென்றுள்ளது.
சொறிக் கல்முனையைச் சேர்ந்த 58 வயதான ஞானபிரகாசம் டூரியநாயகி எனும் பெண்ணை முதலை இழுத்துச் சென்றதாகவும், இதுவரை அவர் மீட்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக, ஆறுகளில் நீர் அதிகரித்துள்ளது. காரைதீவு – மாவடிப்பள்ளி நீர் ஓடையில் வழமையாக நடமாடும் முதலைகள் மழை வெள்ளத்துடன் கிட்டங்கி ஆறு உட்பட பல இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன.
இவ்வாறு முதலை நடமாட்டம் உள்ள இடங்கள் தொடர்பில் – பிரதேச சபைகள், சுற்றுச் சூழல் அதிகாரிகள், வன பரிபாலன அதிகாரிகள்உள்ளிட்டோர், பொதுமக்களுக்கு தெளிவூட்டும் வகையில் எச்சரிக்கை பலகைகளை காட்சிப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




