
பாழடைந்த இடமொன்றில் மறைவாக நிறுத்தி வைக்பட்டிருந்த – போக்குவரத்து அமைச்சுக்கு சொந்தமான வாகனம் ஒன்றை – இன்று திங்கட்கிழமை (14) நுவரெலியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
நுவரெலியா – பதுளை பிரதான வீதியோரத்தில் அமைந்துள்ள, நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்துக்குச் சொந்தமான கட்டடத்திற்கு அருகில் மறைத்து விடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனம் பல வருடங்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வாகனத்தின் முன் பக்க இலக்கத்தகடு இல்லை என்றும், பின் பகுதியில் மாத்திரம் இலக்கத்தகடு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஜீப் வாகனமும் மற்றுமொரு ஜீப் வாகனமும் – நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் தனிப்பட்ட தொடர்பு அதிகாரியின் பாவனைக்காக, அமைச்சரினால் வழங்கப்பட்டது என்று – ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இதனுடன் தொடர்புடைய மற்றொரு ஜீப் வண்டியை கண்டுபிடிக்க பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நுவரெலியா பிரதேசத்தில் அரச வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது, இந்த ஜீப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



