
நச்சுத்தன்மை வாய்ந்த ‘ஆர்செனிக்’ அடங்கிய – மீன் டின் தொகுதியொன்று, ஊறுகொடவத்தையில் உள்ள சுங்க களஞ்சிய வளாகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஐந்து கொள்கலன்களில் இருந்த கண்டுபிடிக்கப்பட்ட இந்த டின் மீன்களின் பெறுமதி 215,000 அமெரிக்க டொலர்களாகும். இது இலங்கைப் பெறுமதியில் 06 கோடியே 28 லட்சத்து 46 ஆயிம் ரூபாயாகும்.
நச்சுத்தன்மை வாய்ந்த மேற்படி டின் மீன்களை – சுற்றுச்சூழல், வனவிலங்கு, வன வளங்கள், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் ஆகிய அமைச்சுகளின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி நேற்று (11) பார்வையிட்டார்.
கைப்பற்றப்பட்ட இந்த டின் மீன்களை அழிக்கப்படுவதற்கு பதிலாக, மீள் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி கூறியுள்ளார்.
“இந்த டின் மீன்கள் மே 2022 இல் இறக்குமதி செய்யப்பட்டன. இதில் நிர்ணயிக்கப்பட்ட எடை அளவைத் தாண்டி நச்சுத்தன்மை வாய்ந்த அதிகளவு ‘ஆர்சனிக்’ உள்ளது. எனவே, இது மனித நுகர்வுக்கு தகுதியற்றது. இது கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனல், இது மனித நுகர்வுக்கு தகுதியற்றது என்பதால், கால்நடை தீவனமாகவும் பயன்படுத்த முடியாது” எனவும் அவர் தெரிவித்தார்.



