தலைப்புச் செய்திகள்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவருக்கு எதிரான மனுவை விசாரிக்க தீர்மானம்

அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் நொவம்பர் மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலை முன்கூட்டியே உளவுத்துறை பெற்றிருந்தும், அதை தடுக்க நடவடிக்கை எடுக்காததால், அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூகம் மற்றும் மத மையம் (CSR) தாக்கல் செய்த மனு, நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (09) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது, ​​பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சந்தக ஜயசுந்தர, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் – தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஏற்கனவே புதிய விசாரணையை ஆரம்பித்துள்ளதால், தனது கட்சிக்காரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

அதன்படி, மனு தொடர்பாக முன்வைக்கப்பட்ட உண்மைகளை உறுதிப்படுத்துவதா அல்லது வாபஸ் பெற அனுமதிப்பதா என்பதை பரிசீலிப்பதற்காக, அடுத்த விசாரணையை நொவம்பர் 13ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தொடர்பான செய்தி: ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கு: அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி, முழு நஷ்டஈட்டையும் செலுத்தி முடித்தார்