முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர பயன்படுத்திய வீடு, பாடசாலைக்கு ஒப்படைப்பு
முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர வசித்து வந்த அரசுக்குச் சொந்தமான கொழும்பு 07இல் அமைந்துள்ள – உத்தியோகபூர்வ வீட்டை, கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்திற்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு அமைய முன்னாள் அமைச்சர் இன்று (08) அந்த வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மஹிந்த அமரவீர; குறித்த வீட்டை சிறிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயத்துக்கு வழங்குவதற்கான பிரேரணையை, முன்னைய அரசாங்கத்திடம் தான் முன்வைத்திருந்ததாக கூறினார்.
அதற்கு முன்னைய அரசாங்கத்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வீட்டை பாடசாலைக்கு வழங்குவதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வீட்டை – குறித்த பாடசாலை பயன்படுத்த முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.