
இலங்கை நாடாளுமன்றம் நேற்று (24) நள்ளிரவு கலைக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையிலும், 1981 ஆம் ஆண்டு இலக்கம் 1ஆம் இலக்க நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 10 வது பிரிவின் விதிகளின்படியும், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, புதிய நாடாளுமன்றத்தை நொவம்பர் 21, 2024 அன்று கூட்டுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 2024ஆம் ஆண்டு நொவம்பர் 14ஆம் திகதி – புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 04 ஆம் திகதி தொடங்கி ஒக்டோபர் 11, 2024 நண்பகல் 12 மணிக்கு முடிவடையும் காலத்தை வேட்பு மனுக்களை சமர்ப்பிக்கும் காலமாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய நாடாளுமன்றத்துக்கான ஐந்தாண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் முடிவடைகிறது.



