மதுபான நிலைய ‘லைசன்’களைப் பெற்றுக் கொண்டு, ரணிலை ஆதரிப்போரின் விவரங்கள் பகிரங்கப்படுத்தப்படும்: றிசாட் பதியுத்தீன்
மதுபான விற்பனை நிலையங்களைத் திறப்பதற்கான ‘லைசன்’களுக்காக, ரணிலை ஆதரிப்போர் மற்றும் ரகசியமாக மதுபான ‘கோட்டாக்களை’ பெற்றுக் கொண்டோரின் விவரங்கள் சஜித் பிரேமதாசவின் எதிர்வரும் ஆட்சியில் பகிரங்கப்படுத்தப்படும் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுத்தீன் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, செவ்வாய்க்கிழமை (03) மன்னாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது, அவர் இதனைக் கூறினார்.
கோட்டாபய ராஜபக்ஷவின் இனவாத ஆட்சியால், நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்தது. சிங்களப் பெரும்பான்மை வாக்குகளாலேயே – தான் ஆட்சிக்கு வந்ததாக மமதையுடன் கோட்டா நடந்து கொண்டார். மதங்களைப் புண்படுத்துமளவுக்கு அவரின் மனநிலை இறுமாப்படைந்தது. கொரோனவில் மரணித்த முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தீயில் எரித்தார். இந்த அராஜகத்துக்கு உடந்தையாக இருந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களே இன்று ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளனர்.
நாங்கள் செய்த நல்ல விடயங்களை நிறுத்துவதற்கென்றே இங்கு ஒரு ராஜங்க அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்டுக்கரைக்குளம், வியாயடிக்குளம், நெடுங்கண்டல் குளம் மற்றும் அஹத்திக்குளம் போன்ற விவசாயக் குளங்களைப் புனரமைத்து, இருபோக நெற்செய்கைக்கு வாய்ப்புக்களை வழங்கவுள்ளோம்.
இங்கே வெள்ளமாகத் திரண்டுள்ள மக்கள் பணத்துக்காகவோ, சாப்பாட்டுப் பார்சலுக்காகவோ சேர்ந்த கூட்டமல்ல. சஜித் பிரேமதாசவை வெல்ல வைக்கும் ஒரே வேட்கையோடு சேர்ந்த கூட்டமாகும்.
சஜித்தின் வெற்றிக்காக அமோக ஆதரவளித்த பெருமையில் முதலிடம் பிடிக்க, மன்னார் மாவட்ட மக்கள் முந்திக்கொள்ள வேண்டும்.
இந்தியாவுக்கு பாலம் அமைத்து வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்வோம்” என்றார்.