
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச – குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 1000 மில்லியன் ரூபாய் மான நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் – குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ், தான் காரணமின்றி கைது செய்யப்பட்டு, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகவும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று (12) தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அங்கிகாரம் பெற்ற அதிகாரி எரங்க ரம்புக்வெல்ல, சிரேஷ்ட அதிகாரம் பெற்ற அதிகாரி சுஜீவ ரத்நாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
2015 ஆம் ஆண்டு, துபாய் மற்றும் இத்தாலியில் உள்ள இலங்கையர்களின் அழைப்பின் பேரில், தொடர் விரிவுரைகளுக்காக ஐரோப்பாவுக்கு பயணிப்பதற்கு விமல் வீரவன்ச தயாராகிக் கொண்டிருந்த போது, காலாவதியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வீரவன்ச வெளிநாடு செல்வதாக குற்றம் சாட்டப்பட்டார்.
இருந்தபோதும், விமான நிலையத்துக்கு வந்தபோது, தன்னிடம் இருந்த கடவுச்சீட்டு, தொலைந்து போன பின்னர் புதிய கடவுச்சீட்டைப் பெற்றுக் கொண்ட பிறகு, கண்டுபிடிக்கப்பட்ட முன்னைய கடவுச்சீட்டு என்பதை உணர்ந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியிருந்தார்.
ஆயினும் எந்தவொரு நியாயமான காரணமும் இன்றி – குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் தான் கைது செய்யப்பட்டதாகவும், நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
அது தொடர்பில், குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து சுமார் 09 வருடங்களின் பின்னர் நீதிமன்றம் தம்மை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவித்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, அவர் தாக்கல் செய்த இந்த வழக்கில், நியாயமான விசாரணையை நடத்தாமல் தனக்குத் தீங்கிழைக்கும் வகையில் கைது செய்து வழக்குத் தொடர்ந்ததால் ஏற்பட்ட அவதூறுக்காக பிரதிவாதிகளிடமிருந்து 1,000 மில்லியன் ரூபாய் தனக்கு நஷ்டஈடு கோரியுள்ளார்.



