தலைப்புச் செய்திகள்

மக்கள் வங்கி அட்டாளைச்சேனை கிளையின் அலட்சியத்தால், ATM இல் பணம் பெற முடியாமல் அடிக்கடி ஏமாற்றத்துடன் திரும்பும் பொதுமக்கள்

– அஹமட் –

ட்டாளைச்சேனை மக்கள் வங்கிக் கிளையின் ஏரிஎம் (ATM) இயந்திரத்தில் பணம் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை – அடிக்கடி ஏற்படுகின்றமையினால், பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

ஏரிஎம் இயந்திரத்தில் உரிய நேரங்களில் பணம் நிரப்பப்படாமையினாலேயே இந்த நிலை அடிக்கடி ஏற்படுகின்றதாகத் தெரியவருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை காலை சுமார் 10.00 மணியளவில் இயந்திரத்தில் பணம் கிடைக்காமையினால், அங்கு வந்து ஏமாற்றமடைந்த பலர் – இது குறித்து அந்த இடத்தில் அதிருப்தி வெளியிட்டதோடு, இவ்வாறு அடிக்கடி நடைபெறுவதாகவும் கூறிச் சென்றனர்.

வங்கி நேரம் ஆரம்பித்தவுடன் உடனடியாக பணத்தை ஏரிஎம் இயந்திரத்தில் நிரப்பினால் – இந்த நிலை ஏற்படாது என்றும், இயந்திரத்தில் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலைமை குறித்து – மக்கள் முறைப்பாடு செய்த பின்னரே, பணம் நிரப்பப்படுவதாகவும் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த நிலைவரம் ஏற்படுவதை தவிர்க்குமாறு வங்கி முகாமையாளரிடம் பொதுமக்கள் நேரடியாக எடுத்துக் கூறியும் – எந்தவிதப் பலனும் இல்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இன்று ஞாயிற்றுக்கிழமைமை (11ஆம் திகதி) மாலை வேளையிலும், குறித்த வங்கிக் கிளை இயந்திரத்தில் பணம் பெற முடியாத நிலை காரணமாக – பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றமையை அவதானிக்க முடிந்தது.

மக்கள் வங்கிக் கிளையின் அட்டாளைச்சேனைக் கிளையில் – அதே ஊரைச் சேர்ந்தவர் அண்மையில் முகாமையாளராக நியமனம் பெற்றிருந்த போதும், இவ்வாறான நிலை தொடர்கின்றமை கவலைக்குரியதாகும்.

எனவே, இது குறித்து வங்கியின் மேலிடம் கவனத்திற் கொண்டு, இந்த நிலைமை ஏற்படுவதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.