ஈஸ்டர் தாக்குல் தொடர்பில் அபராதம் விதிக்கப்பட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்தவுக்கு கட்டாய விடுமுறை

🕔 July 18, 2024

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானியுமான நிலந்த ஜயவர்தன கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். ஈஸ்டர் தின தாக்குதல்கள் தொடர்பில் அவருக்கு எதிரான விசாரணைகள் முடிவடையும் வரையில் இந்த கட்டாய விடுமுறை அமுலில் இருக்கும்.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன ஒழுக்காற்று விசாரணைக்காக விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானிக்கு எதிராக ஏன் ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை அடுத்து – இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை பின்பற்றி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உச்ச நீதிமன்றம் – கடந்த வாரம் அறிவுறுத்தியிருந்தது.

புலனாய்வுத் தகவல் கிடைத்த போதிலும், 2019 ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் புலனாய்வு பிரதானி சிசிர மென்டிஸ் ஆகியோருக்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்கொன்று தொடரப்பட்டிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

அந்த வழக்கில் மேற்படி ஐவரையும் தவறிழைத்தோர் என அறிவித்த உச்ச நீதிமன்றம், ஈஸ்டர் தின தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கும் வகையில், மேற்படி ஐவருக்கும் அபராதம் விதித்திருந்தது.

அதன்படி அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன 75 மில்லியன் ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டுமென, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தொடர்பான செய்தி: ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி 10 கோடி ரூபா இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்