
கொழும்பு கோட்டை நீதவான் கோசல சேனாதீர, அவரின் பணியிலிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அவர் கல்கிசை மாவட்ட நீதிமன்றில் கடமையாற்றிய காலத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்கும் பொருட்டு, நீதிச் சேவை ஆணைக்குழுவினால் அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு – நீதிமன்றத்திலிருந்து மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தை சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்டதாக, நீதவான் கோசல சேனாதீர மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக மௌபிம பத்திரிகை தெரிவித்துள்ளது.
விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், விசாரணை முடிவடையும் வரை நீதவான் கோசல சேனாதீரவை பணி இடைநீக்கம் செய்வறத்கு நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, கொழும்பு கோட்டை நீதவான் கோசல சேனாதீர 2024ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் திகதி முதல் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
நீதி அமைச்சின் செயலாளரினால் கடந்த ஜூலை 08 ஆம் திகதி ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் – ஆரம்பகட்ட விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
கல்கிசை மாவட்ட நீதிமன்ற நீதிபதி தொடர்பான குற்றச்சாட்டினை அண்மையில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தியதை அடுத்து இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



