நாட்டில் குற்றச் செயல்கள் 23 வீீதம் வீழ்ச்சி; பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு: காரணத்தையும் வெளியிட்டார்

🕔 June 16, 2024

பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்ற ‘யுக்திய’ விசேட நடவடிக்கையினால், குற்றச்செயல்கள் 23 வீதம் குறைவடைந்துள்ளதாக, பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட போதைப்பொருள் பாவனையாளர்களை அவர்களின் குடும்பங்களுடன் ஒன்றிணைக்கும் நிகழ்வு – பத்தரமுல்லையில் இடம்பெற்றபோது, அவர் இதனைக் கூறினார்.

“யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து குற்றச்செயல்கள் 23% குறைவடைந்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

மேல்மாகாணத்தில் அதிகளவு போதைப்பொருள் விநியோகம் இடம்பெறுவதாகவும் நுகேகொட மற்றும் கல்கிசை பிரதேசங்களில் அதிகளவான பாதிப்புகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்ட தென்னகோன், இவ்வருட இறுதிக்குள் இலங்கையில் குற்றச் செயல்கள் 50% ஆக குறையும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.

“06 மாதங்களுக்குள் இந்த நடவடிக்கையின் மூலம் 5,000 போதைப்பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் வலையமைப்பில் 90%க்கும் அதிகமானவற்றை நாங்கள் அகற்றிவிட்டோம்”என்றும் அவர் மேலும் கூறினார்.

இலங்கை முழுவதும் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக ‘யுக்திய’ எனும் சிறப்பு நடவடிக்கை – நாடளாவிய ரீதியில் 2023 டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்டது.

சனிக்கிழமை பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வில், பொலிஸாரின் புதிய ‘சுவசர கதெல்ல’ திட்டத்தின் கீழ் புனர்வாழ்வளிக்கப்பட்ட 590 போதைப்பொருள் பாவனையாளர்கள் அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்டனர்.

மேலும், கல்கிசை மற்றும் நுகேகொடை பிரதேசங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக சமூகம் இணைந்து 120 புனர்வாழ்வு பயனாளிகளை தொழில் வாய்ப்புக்காக தெரிவு செய்து – அவர்களுக்கு நியமனக் கடிதங்களை இந்நிகழ்வில் வழங்கி வைத்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்