ஜனாதிபதியின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டு நீடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பில் கலந்துரையாடல்

🕔 June 16, 2024

ர்வஜன வாக்கெடுப்பு இன்றி, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஓராண்டுக்கு நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ‘மௌபிம’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு விசுவாசமான கட்சிகள் – சட்ட வல்லநர்களுடன் கலந்தாலோசித்துள்ளதாகவும், ஜனாதிபதியின் பதவிக் காலத்தை ஐந்திலிருந்து 06 ஆண்டுகளாக நீட்டிக்க சட்டத்தில் இடமிருப்பதாக அவர்கள் நம்புவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது 2015 இல் 19வது திருத்தத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம், ஜனாதிபதியின் பதவிக்காலம் 06இல் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

கடந்த காலத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் ஜனாதிபதியின் பதவிக் காலம் குறைக்கப்பட்டது போல், இப்போது நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அதிகரிக்க முடியும் என, ஜமைக்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான சட்டத்தரணி பிரதிப மஹாநாம தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், ஜனாதிபதி அல்லது நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை 06 ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்கும் எந்தவொரு சட்டமூலமும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு சர்வஜன வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அரசியலமைப்பின் 83 (பி) பிரிவு குறிப்பிடுகிறது.

ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறத் தவறினால், சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல நேரிடும் எனவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்