நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருப்பதனாலேயே, யுத்தத்தை வெல்ல முடிந்தது: ரணில்

🕔 May 29, 2024

னாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும், நிறைவேற்று அதிகாரத்தை ரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சாதக, பாதக அம்சங்களுடன் கூடியதாகவே காணப்படுவதாகவும், ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் 30 வருட யுத்தத்தை வெற்றிகொள்ளவும் முடிந்ததுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இளம் சட்டத்தரணிகளுடன் சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்ட போதே> ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.ந

நாடாளுமன்றத்துக்கு ஜனாதிபதி பொறுப்புக்கூறும் வகையில் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தற்போது நிறைவேற்று அதிகாரத்தின் பல பிரிவுகள் மாகாண சபைகளுக்கும் நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் ஜனாதிபதியின், அதிகாரங்களை நாடாளுமன்றத்திற்கு பகிர்ந்தளிப்பதற்கான சட்டமொன்றை நிறைவேற்றவிருப்பதாகவும் தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தலொன்று நிச்சயமாக நடத்தப்படும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்;

“இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டத்தன் பின்னர் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அதுதான் நாடாளுமன்றத்தின் உயர் அதிகாரம். பாராளுமன்றமே உச்சமானது.

அமெரிக்க அமைப்பு வேறு. அமெரிக்க அமைப்பில், அவர்கள் ஒரு சட்டத்தை உருவாக்கும் போது, ஜனாதிபதிக்கும் நிறைவேற்று அதிகாரங்களையும், காங்கிரசுக்கும் சட்டமன்ற அதிகாரங்களையும், நீதிமன்றங்களுக்கு நீதித்துறை அதிகாரங்களையும் வழங்கினர்.

நமது நாடு சமஷ்டி முறையை பின்பற்றாததால் ஆங்கிலேய முறையை கடைப்பிடிக்கிறோம். இந்தியா ஒரு சமஷ்டி நாடாக இருந்ததால் சமஷ்டி முறைக்கு செல்ல வேண்டியிருந்தது. ஆனால் நாம் ஒரு சமஷ்டி நாடு அல்ல. நமது நாட்டில் சட்டம் இயற்றும் இறுதி அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை வகித்து நாட்டுக்கு பெரும் பணி ஆற்றியுள்ளார். மகாவலி, சமனல குளம், லுணுகம்வெஹர போன்ற பாரிய திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டன. கோட்டே தலைநகராக மாற்றப்பட்டது. இரண்டு வர்த்தக வலயங்கள் நிறுவப்பட்டன. இந்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் 11 வருட யுத்தத்திற்கு மத்தியில் செயற்படுத்தப்பட்டவையாகும்.

அத்துடன் மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச, சுமார் இருநூறு ஆடைத் தொழிற்சாலைகளை ஆரம்பித்தார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இல்லாவிட்டால், இலங்கை யுத்தத்தில் வெற்றி கிடைத்திருக்காது. இலங்கையில் நெருக்கடி ஏற்பட்டு ஆட்சி கவிழும் என வெளிநாடுகள் எதிர்பார்த்தன. ஜனாதிபதியொருவர் இருந்ததால் அந்த அதிகாரத்தை யாராலும் பறிக்க முடியவில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அந்த அதிகாரம் இருந்ததாலேயே அவரால் ராணுவத்தை நிலைநிறுத்தி யுத்தத்தில் வெற்றிபெற முடிந்தது.

நல்லாட்சி அரசாங்கத்தின் போது அது முறையாக பயன்படுத்தப்படவில்லை. நிறைவேற்று ஜனாதிபதி தனியாகவும், நாங்கள் தனியாகவும் செயற்பட வேண்டிய நிலைமை உருவானது. போராட்டத்தின் போது – நிறைவேற்று அதிகாரம் இருந்ததாலேயே நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்தது. அன்று பிரதமர் பதவியை ஏற்க யாரும் முன்வரவில்லை. அப்போது ஜனாதிபதி கப்பலில் ஏறி திருகோணமலை சென்ற போது, சிலர் என்னை பிரதமர் பதவியில் இருந்து விலகச் சொன்னார்கள்.

அதன்போது, பெரும்பான்மை உள்ள ஒருவர் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என்றும். இல்லாவிட்டால் நான் பதவி விலக முடியாது என்றும் கூறினேன். பதவி விலகுவதற்கான கடிதத்தை எழுதினாலும் அதனை ஜனாதிபதியிடமே கையளிக்க வேண்டும். ஜனாதிபதி கப்பலில் தஞ்சம் புகுந்திருந்த காரணத்தினாலும், நாட்டை விட்டு மாலைத்தீவுக்கு சென்றதாலும் என்னால் அந்த கடிதத்தை வழங்க முடியவில்லை. அழுத்தங்கள் மற்றும் எனது வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட காரணத்தினால், நான் பதவி விலகியிருந்தால் – ஜனநாயகத்திற்கு முரணாகவே எவரேனும் நாட்டை கைபற்றியிருப்பார்கள்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகவும் அதில் வென்று ஜனாதிபதியாகப் போவதாகவும் சொல்லும் எந்நவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதாக இதுவரை அறிவிக்கவில்லை. அதனால் நாடாளுமன்றத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டியது அவசியம்.

இப்போதும் மாகாண சபைக்கு நிறைவேற்று அதிகாரங்கள் சில வழங்கப்பட்டுள்ளன. மற்றொரு பகுதி – நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இன்னும் சில சட்டங்கள் கொண்டுவரப்பட்ட பின்னர் அந்த அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு பிரிந்துச் செல்லும்

நாடாளுமன்றத்திற்கு ஜனாதிதி பொறுப்புக்கூறும் வகையில் சட்டங்களை நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும். புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பொருளாதார மாற்ற சட்டத்தின் ஊடாக அடுத்த 04 வருடங்களுக்கான – அரசாங்கத்தின் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வருடமும் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் வருட இறுதியில் நாடாளுமன்றத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் முன்மொழியப்பட்ட மக்கள் சபை முறைமை சாத்தியமான ஒன்றாகும். அதேபோல் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவிருக்கும் பாலின சமத்துவச் சட்டமும் நடைமுறைக்கேற்றது என்பதைக் கூற வேண்டும்” என்றார்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்