பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் மோசடி: இடைக்காலத் தடையை அடுத்து, கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு ‘பல்டி’

🕔 May 28, 2024

– முன்ஸிப் –

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்புச் செய்யும் பொருட்டு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை தொடர்பில், தாம் மேற்கொண்ட கணிணித் தரவு உள்ளீடுகளில் தவறுகள் ஏற்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஏ. மன்சூர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக அந்தப் போட்டிப் பரீட்சை சம்பந்தமான மேல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘கிழக்கு மாகாண, மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற சிங்கள மற்றும் தமிழ் மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, இலங்கை ஆசிரியர் சேவை 3-I(அ) தரத்துக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை 2023’ எனும் தலைப்பில், கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஏ. மன்சூர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே – மேற்படி விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நேற்றைய (27) திகதியிட்டு ‘அனைத்துப் பரீட்சார்த்திகளுக்குமான அறிவித்தல்’ என்ற குறிப்புடன் வெளியாகியுள்ள – அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முழு விபரம் வருமாறு;

‘கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினால் மேற்குறித்த போட்டிப்பரீட்சையின் தரவு உள்ளீடு செய்யும் கணினி அமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக, அந்தப் போட்டிப்பரீட்சை சம்பந்தமான மேல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்பதை பரீட்சார்த்திகள் அனைவருக்கும் தயவுடன் அறியத்தருகிறேன்.

இந்த கணினி அமைப்பு மேம்படுத்தப்பட்ட பின்னர், இறுதித் தேர்வுப் பட்டியல் மற்றும் மொத்த புள்ளிகள் பட்டியல் ஆகியவை – கிழக்கு மாகாண இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மேலும் தயவுடன் அறியத்தருகிறேன்.

அத்துடன் இந்த காரணத்தால் தங்களுக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டிருந்தால் அது தொடர்பாக எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்’.

குறித்த போட்டிப் பரீட்சைகளின் அடிப்படையில்பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனங்கள் இன்று (28) நடைபெறவிருந்தது.

ஆயினும், இந்த நியமனத்தில் பல்வேறு மோசடிகள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்து, கல்முனை மேல் நீதிமன்றில்குரல்கள் இயக்கம்ரிட் மனுவொன்றை தாக்கல் செய்து, நடைபெற ஏற்பாடாகியிருந்த ஆசிரியர் நியமனத்துக்குஇடைக்காலத் தடையொன்றைப் பெற்றுள்ள நிலையிலேயே, கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுஇந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த ஆசிரியர் நியமனத்துக்காக தெரிவு செய்யப்பட்டோர் பெற்றுக் கொண்டதாக கூறப்படும் புள்ளிகளுக்கும், அவர்களின் உண்மையான புள்ளிகளுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுவதாகவும், தவறான புள்ளிகளின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும், குரல்கள் இயக்கம் தாக்கல் செய்தரிட்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக, கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுஅடிக்கும்பல்டியாகவே, மேற்படி அறிக்கை அமைந்துள்ளது என, பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை

தொடர்பான செய்தி: இன்று நடைபெறவிருந்த கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை: களத்தில் இறங்கியது குரல்கள் இயக்கம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்