இன்று நடைபெறவிருந்த கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை: களத்தில் இறங்கியது குரல்கள் இயக்கம்

🕔 May 28, 2024

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனம் இன்று (28) நடைபெறவிருந்த நிலையில், குறித்த ஆசியர் நியமனத்துக்கு கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

குரல்கள் இயக்கம் தனது சட்டத்தரணிகள் ஊடாகத் தாக்கல் செய்த ரிட் மனுவின் அடிப்படையில், இந்தத் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான தெரிவுப்பட்டியல் நேற்றுமுன்தினம் (26) மாலை வெளியாகியிருந்த நிலையில், அதில் பல அப்பட்டமான முறைகேடுகள் இருப்பதாக கூறி அநீதியிழைக்கப்பட்ட பல பட்டதாரிகள் தமக்கான நீதியினை பெற்றுத்தருமாறு குரல்கள் இயக்கத்திடம் (Voices Movement ) வேண்டியிருந்தனர்.

இதற்கிணங்க, உடனடியாக செயற்பட்டிருந்த குரல்கள் இயக்கம் – துரித கதியில் செயற்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்காக தனது சட்டத்தரணிக்ள ஊடாக கல்முனை மேல் நீதிமன்றில் ‘ரிற்’ (Writ) வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தது.

அதனடிப்படையில் கல்முனை மேல் நீதிமன்றில் இவ்வழக்கு அழைக்கப்பட்ட வேளையில் குரல்கள் இயக்க சட்டத்தரணிகள் றாஸி முகம்மட், ஏ.எல்.ஆஸாத், எப்.எச்.ஏ. அம்ஜாட், ஏ.எம். சாதிர், எம்.எம்.ஏ. சுபாயிர் ஆகியோர் பாதிக்கபட்ட பட்டதாரிகள் சார்பாக ;ஆஜராகி தமது பக்க வாதங்களை முன்வைத்திருந்தனர்.

குறித்த வாதங்களின் நியாயத்தன்மையினை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இன்று (28.05.2024) இடம்பெறவிருந்த – கிழக்கு மாகாண பட்டாதாரி ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் க.பொ.த. உயர்தர பாடங்களைக் கற்பிப்பதற்காக, ஆசிரியர் நியமனம் வழங்கும் பொருட்டு, போட்டிப் பரீட்சைகள் நடத்தப்பட்டதோடு – அண்மையில் நேர்முகத் தேர்வுகளும் இடம்பெற்றிருந்தன.

இதனையடுத்து போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளின் பெயர் விபரங்களை – நேற்று முன்தினம் கிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழு வெளியிட்டது.

ஆனால், ஆசிரியர் நியமனத்துக்காக தெரிவு செய்யப்பட்டோர் பெற்றுக் கொண்டதாக கூறப்படும் புள்ளிகளுக்கும், அவர்களின் உண்மையான புள்ளிகளுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுவதாகவும், தவறான புள்ளிகளின் அடிப்படையில் இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும், குரல்கள் இயக்கம் தாக்கல் செய்த ‘ரிட்’ மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுப் பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக – குரல்கள் இயக்கம் சட்ட ரீதியாகப் போராடி, கடந்த காலங்களிலும் நீதியைப் பெற்றுக் கொடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்