ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

🕔 May 20, 2024

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் – பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி – மல்வத்து, அஸ்கிரி, அமரபுர மற்றும் ராமன்ய ஆகிய நான்கு பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் – ஞானசார தேரருக்கு, 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கூரகல பௌத்த விகாரை தொடர்பாக ஞானசார தேரர் வெளியிட்ட கருத்துக்கள் மூலம், தேசிய மற்றும் மத நல்லிணக்கத்துக்கு கேடு விளைவித்தார் என, அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மல்வத்து பீடத்தின் பிரதம பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர், அஸ்கிரி பீடத்தின் வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரர், அமரபுர பீடத்தின் காரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி மகாநாயக்க தேரர் மற்றும் ராமன்யா பீடத்தின் மகுலேவே விமல மகாநாயக்க தேரர் ஆகியோர், ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கமாறு கோரி – ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஞானசார தேரரின் செயற்பாடுகள் பலராலும் பாராட்டப்பட்டதாகவும், மத மற்றும் இன முரண்பாடுகளைத் தடுப்பதற்கும் அவரின் நடவடிக்கைகள் உறுதுணையாக இருந்ததாகவும் நான்கு பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் மேற்படி கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணிக்கு தலைமை தாங்கிய ஞானசார தேரர், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்கும் கணிசமான பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு – ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறும், இந்த பங்களிப்புகளை கவனத்தில் கொள்ளுமாறும் ஜனாதிபதிக்கு மகாநாயக்க தேரர்கள் எழுதிய கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்