‘யுக்திய’ நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட வாகனங்களை, உரிமையாளர்களிடம் வழங்குமாறு உத்தரவு

🕔 February 17, 2024

‘யுக்திய’ எனும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் போது, பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட பல வாகனங்களை, பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு – நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடுவெல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன், ஏறக்குறைய 100 மில்லியன் ரூபாய் பெறுமதியான வாகனங்களை ஒப்படைக்குமாறு, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.

விசாரணையின் பொருட்டு வாகனங்களை மேலும் தடுத்து வைப்பதற்கு அனுமதிக்குமாறு – பொலிஸார் விடுத்த கோரிக்கையையும் நீதவான் இதன்போது நிராகரித்துள்ளார்.

மேற்படி சொத்துக்களை கையகப்படுத்துவதற்கு – மேல் நீதிமன்றத்தில் முறையான உத்தரவுகள் பெறப்படவில்லை என வழக்கு விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்டது.

இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த வருடம் டிசெம்பர் மாதம் ‘யுக்திய’ என்ற விசேட நடவடிக்கை பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் கடத்தல்காரர் என கூறப்படும் ‘வெலிவிட்ட சுத்தா’ என அழைக்கப்படும் – மலலகே சுதத் கித்சிறியின் சகோதரிக்குச் சொந்தமான பல வாகனங்களை, கடுவெல பொலிஸார் கைப்பற்றி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தனர்.

குறித்த பெண்ணிடம் இருந்து ஐந்து சொகுசு பஸ்கள், ஒரு சொகுசு வாகனம் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் என்பன கடுவெல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்