கெஹலியவின் ராஜிநாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

🕔 February 6, 2024

சுற்றாடல் அமைச்சர் பதவியிலிருந்து கெஹலிய ரம்புக்வெல்ல ராஜினாமா செய்ததை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் (immunoglobulin) மருந்து கொள்வனவு ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி – கடந்த வாரம் அவர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் ராஜினாமா கடிதம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டதாகவும், அவர் அதனை ஏற்றுக்கொண்டதாகவும் இன்று (06) முற்பகல் தெரிவிக்கப்பட்டது.

வாக்குமூலமொன்றை பதிவுசெய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்றிருந்த கெஹலிய ரம்புக்வெல்ல இம்மாதம் 02 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு கிட்டத்தட்ட 10 மணி நேரம் – அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

இதன் பின்னர் மறுநாள் நீதிமன்றில் அவர் ஆஜர் செய்யப்பட்டமையை அடுத்து, இம்மாதம் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தவிட்டது. ஆயினும் அன்றைய தினம் சிறைச்சாலை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

சுகாதார அமைச்சராக இருந்த போது கெஹலிய ரம்புக்வெல்ல – தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையில் (NMRA) பதிவுசெய்யப்பட்ட விநியோகஸ்தர்களை நீக்கியதாகவும், பதிவு செய்யப்படாத விநியோகஸ்தர்களை கொள்முதல் செயல்முறைக்குள் நுழைய அனுமதித்ததாகவும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில், அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இம்யூனோகுளோபுலின் மருந்து ஊழல் வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, சுகாதார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, சுற்றாடல் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்