அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் தலைவர் தெரிவு: பொருத்தமற்றவர் யார் என்பது தொடர்பில் கவனமாக இருப்போம்

🕔 January 19, 2024

ட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் நடப்பு நிர்வாகிகள் பதவி விலகியமையை அடுத்து, புதிய நிர்வாகத் தெரிவு – இன்று (19 வெள்ளிக்கிழமை) நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து பள்ளிவாசலின் தலைவர் பொறுப்பைப் பெற்றுக் கொள்வதற்காக சிலர் கடுமையாக முயற்சிக்கின்றனர்.

இம்முறை 13 குடிகளின் பிரதிநிதிகளில் இருந்து – பெரிய பள்ளிக்கான தலைவர் உள்ளிட்ட நிர்வாகம் தெரிவு செய்யப்படவுள்ளது.

பள்ளிவாசல் தலைவர் பொறுப்பு என்பது மிகவும் கண்ணியத்துக்குரியது என்பதை நாம் அறிவோம். மார்க்கத்துடன் ஒன்றிணைந்த வாழ்க்கை முறையைக் கொண்டவர், நேர்மையானவர், மக்களுடன் சிறந்த நல்லுறவு கொண்டவர், எந்தவித மோசடிகள் மற்றும் குற்றங்களிலும் ஈடுபடாதவர்களை பள்ளிவாசலின் தலைவர் பொறுப்புக்குத் தேர்வு செய்தல் அவசியமாகும்.

பள்ளிவாசலின் தலைவர் தேர்வு நடைபெறும் போது, அதற்கு யார் பொருத்தமானவர் என்பதை விடவும், யார் பொறுத்தமற்றவர் என்பது குறித்து – மக்கள் கவனம்கொள்ள வேண்டும்.

தற்போது அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படும் நபர்களில் ஒருவர் – அரச அதிகாரியாக இருந்த போது மிகவும் மோசடிகளில் ஈடுபட்டார். அவர் ஒலுவில் பிரதேசத்திலுள்ள அரசுக்குத் சொந்தமான காணியொன்றை தனது சகாக்களுடன் இணைந்து மோசடியாக அபகரித்துக் கொண்டவர். அவரின் அந்தக் காணி மோசடி தொடர்பான அனைத்து ஆவணங்களும் ‘புதிது’ செய்தித்தளத்திடம் உள்ளது.

இதே நபர், அட்டாளைச்சேனை சந்தைச் சதுக்கத்தில் – பள்ளிவாசல் காணியில் அமைந்திருந்த இஸ்லாமிய அடையாளங்களைக் கொண்ட மீலாத் நினைவுத் தூபியை – அவர் அரச அதிகாரியாக இருந்தபோது, தான்தோன்றித்தனமாக உடைத்தெறிந்து விட்டு, அந்த இடத்தில் வெறும் ‘தூண்’ ஒன்றைக் கட்டி விட்டு, ஒரு ஊரின் வரலாற்றுச் சின்னத்தினையே இல்லாமல் ஆக்கினார்.

குறித்த மீலாத் சின்னத்தை உடைத்து விட்டு, அந்த இடத்தில் புதிய ‘தூண்’ நிர்மாணித்தமையில், பெருமளவு நிதி மோசடி இடம்பெற்றதாகவும் அப்போது பரவலாகப் பேசப்பட்டது.

குறித்த நபர் அரச அதிகாரியாக இருந்தபோது – தனது ஊரான அட்டாளைச்சேனையை உச்ச அளவில் அபிவிருத்தி செய்யக் கூடிய வல்லமையைப் பெற்றிருந்த போதிலும், அட்டாளைச்சேனையின் வளர்ச்சிக்காக ஒரு துரும்பைக் கூட தூக்கிப் போடவில்லை.

இவ்வாறான நபர் – இவ்போது அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றமையை அடுத்து, ஊரிலுள்ள பொது நிறுவனங்களின் முக்கிய பதவிகளில் அமர்ந்து கொள்ள முயற்சிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

எனவே பள்ளிவாசல் தலைவரைத் தெரிவு செய்வதில் தொடர்புள்ள அனைவரும் – தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து விட்டு, இறைவனின் இல்லத்துக்கான பொறுப்புதாரியை தெரிவு செய்வதில் மிகவும் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்