அல் ஜசீராவின் காஸா பணியக தலைவர் வெயல் தஹ்தூஹ்வின் மகன் உள்ளிட்ட இரு ஊடகவியலாளர்கள் படுகொலை

🕔 January 7, 2024

ல் ஜசீராவின் காஸா பணியகத் தலைவரான ‘வெயல் தஹ்தூஹ்’வின் மூத்த மகன் ஹம்ஸா தஹ்தூஹ், காஸாவின் கான் யூனிஸின் மேற்குப் பகுதியில் வைத்து – இஸ்ரேலிய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலில் ஊடகவியலாளர் முஸ்தபா துரையாவும் பலியானார்.

அவர்கள் பயணித்த வாகனம் ஏவுகணையால் தாக்கப்பட்டதில், அதில் பயணித்த மற்றொரு ஊடகவியலாளர் ஹஸெம் ரஜப் பலத்த காயமடைந்தார்.

ஏற்கனவே, ஊடகவியலாளர் வெயல் தஹ்தூஹ்வின் காஸா வீட்டின் மீது கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் – அவரின் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோர் கொல்லப்பட்ட நிலையில், தற்போது ஊடகவியலாளர் வெயல் தஹ்தூஹ்வின் மற்றொரு மகனும் கொல்லப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலை அல் ஜசீரா மற்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு (CPJ) ஆகியவை கண்டித்துள்ளன.

ஊடகவியலாளர்கள் ஹம்ஸா தஹ்தூஹ் மற்றும் முஸ்தபா துரையா ஆகியோரின் கொலைகள் தொடர்பில் சுயாதீனமாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும், அவர்களின் மரணத்திற்குப் பின்னால் உள்ளவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு கூறியுள்ளது.

“இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் ஊடகவியலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்படுதல் நிறுத்தப்பட வேண்டும்” என்று ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷெரிப் மன்சூர் தெரிவித்துள்ளார்.

தனது மகனின் படுகொலை குறித்து பேசியுள்ள ஊடகவியலாளர் வெயல் தஹ்தூஹ்; “ஹம்ஸா என்னில் ஒரு பகுதியாக இருக்கவில்லை. எனது எல்லாமுமாக இருந்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 07ஆம் திகதியிலிருந்து காஸாவில் 109 ஊடகவியலாளர்கள் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்குள்ளான ஹம்ஸா உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் பயணித்த வாகனம்
மகனின் படுகொலை தொடர்பில் ஊடகவியலாளர் வெயல் தஹ்தூஹ் பேசுகிறார்

தொடர்பான செய்தி: அல் ஜசீரா ஊடகவியலாளரின் குடும்பத்தை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்: மனைவி, மகன், மகள் படுகொலை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்