தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக் குத்துத் தாக்குதல்

🕔 January 2, 2024

தென் கொரியாவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங் மீது இன்று (02) கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதல் சம்பவம் இன்று (02) செவ்வாயன்று தெற்கு நகரமான புசானுக்கு விஜயம் செய்தபோது நிகழ்ந்தது.

2022 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற லீ, ஒரு பொது நிகழ்வில் ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கூட்டத்துக்கு இடையே நடந்து சென்றபோது, நபரொருவர் அவரின் கழுத்தில் கத்தியால் குத்தினார்.

இதனையடுத்து அவருக்கு அருகிலுள்ள வைத்தியசாலையில் அவசர சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர், ஹெலிகொப்டரில் தலைநகர் சியோலில் உள்ள – தேசிய பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு சுயநினைவுடன் கொண்டு செல்லப்பட்டார்.

லீ முதன்முதலில் அவசர சிகிச்சை பெற்ற வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவிக்கையில், ஆரம்ப சிகிச்சை மற்றும் சி.ரி (CT) ஸ்கேன் அடிப்படையில் அவரின் உயிருக்கு ஆபத்தில்லை எனக் கூறியுள்ளார்.

ஆயினும் லீ யின் தலையில் இருந்து இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் கழுத்து நரம்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் சந்தேகிப்பதாக, அவரின் கட்சி செய்தித் தொடர்பாளர் குவான் சில்-சியுங் தெரிவித்துள்ளார்.

தாக்குதலாளி லீ யின் பெயரைக் கொண்ட காகித கிரீடத்தை அணிந்தபடி லீ யை அணுகி, ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களிடையே லீ பேசிக் கொண்டிருந்த போது, ஓட்டோகிராப் கேட்பதையும், பின்னர் முன்னோக்கி வந்து அவரைத் தாக்குவதையும் வீடியோ காட்சிகள் வெளிக்காட்டுகின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்