ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: 05 மீற்றர் உயரம் கொண்ட சுனாமி தாக்கும் என எச்சரிக்கை

🕔 January 1, 2024

ப்பானின் மேற்குப் பகுதிகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் இஷிகாவா மற்றும் அருகிலுள்ள மாகாணங்களை இன்று திங்கட்கிழமை (01) நில அதிர்வு தாக்கியதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. அவற்றில் ஒரு நில அதிர்வு 7.4 ரிக்டர் அளவுடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது.

உள்ளூர் நேரப்படி மாலை 4:10 மணியளவில் இஷிகாவா மாகாணத்தில் உள்ள நோட்டோ பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, அனைத்து குடியிருப்பாளர்களும் உடனடியாக உயரமான பகுதிக்குச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டது.

இஷிகாவாவில் உள்ள வாஜிமா நகரின் கடற்கரையை ஒரு மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட அலைகள் தாக்கியதாக அந்த நாட்டின் ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இஷிகாவாவுக்கு மீண்டும் நிலநடுக்கம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின்படி, ஐந்து மீட்டர் உயரம் கொண்ட (16.5 அடி) சுனாமி நோட்டோவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து – தலைநகர் டோக்கியோவைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கத் தொடங்கியுள்ளன. சேதம் அல்லது உயிர்சேதம் குறித்து முதலில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஜப்பானும் ஒன்றாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்