முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை: தன்மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சர் அலி சப்ரி பதில்

🕔 December 7, 2023

லங்கையில் கொரோனா காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்ததற்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதாக, தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (07) நாடாளுமன்றில் பதிலளித்தார்.

இந்த விடயத்தை அப்போதைய அரசாங்கத்திடமும், தகனம் செய்யும் செயல்முறையை தீர்மானிக்கும் நிபுணர் குழுவிடமும் எடுத்துரைக்க தான் எடுத்த பல்வேறு முயற்சிகளை இதன்போது அவர் கோடிட்டுக் காட்டினார்.

“ஒரு துறவி என்னை ‘பயங்கரவாதி’ என்று அழைத்தார், ஏனெனில் கொவிட் காரணமாக இறந்தவர்களை தகனம் செய்வதற்கு எதிராகப் பேசினேன். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. முன்னணி ஊடகங்கள் இதற்கு களம் அமைத்துக் கொடுத்தன” என்று அவர் தனது உரையில் குற்றம் சாட்டினார்.

பாக்கிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயத்தின் போது கூட, இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதாகவும், இந்த விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடுமாறு அவரைக் கோரியதாகவும் அமைச்சர் சப்ரி மேலும் கூறினார்.

இந்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், இந்த விடயத்தை அமைச்சரவை மற்றும் நிபுணர்கள் குழுவிடம் பல தடவை எடுத்துரைத்ததாகவும், தன்னால் முடிந்ததை தான் செய்ததாகவும் தெரிவித்தார்.

“எனக்கு இரண்டு தெரிவுகள் இருந்தன, ஒன்று கையிழந்து விட்டு ஓடிவிடுவது மற்றையது பின்வாங்கிப் போராடுவது.

நான் பின்வாங்கி நின்று, போராடி, ஓரளவு புத்திசாலித்தனத்தை பயன்படுத்தினேன், அது – ஓட்டமாவடியில் 3,500 பேரை கண்ணியமாக அடக்கம் செய்ய உதவியது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

வலுக்கட்டாயமாக தகனம் செய்தது தவறு என்பதை ஒப்புக்கொண்ட வெளிவிவகார அமைச்சர், இது மீண்டும் நாட்டில் நடக்கக் கூடாது என்றும் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்