கிழக்கில் சதொச கிளைகள் மூடப்பட்டு, பணியாளர்கள் பழிவாங்கப்பட்டனர்: றிசாட் எம்.பி குற்றச்சாட்டு

🕔 December 1, 2023

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் பணிபுரிந்த பெரும்பாலான சதொச கிளைகள் மூடப்பட்டு, அங்கிருந்த ஊழியர்கள் வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டமையால், பிரதேச மக்களும் சதொச பணியாளர்களும் மிகவும் கஷ்டப்படுவதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் வர்த்தக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.

இன்றைய தினம் (01) நாடாளுமன்றில் இந்தக் கோரிக்கையை விடுத்த அவர், தொடர்ந்து கூறுகையில்;

“நான் – கைத்தொழில் வர்த்தக அமைச்சைப் பொறுபேற்ற போது 275 சதொச கிளைகளே இயங்கின. எனது பதவிக்காலத்தில் அவற்றை 400 ஆக அதிகரித்து, இந்த நிறுவனத்தை லாபகரமானதாக ஆக்கினேன்.

கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்த பின்னர் கிழக்கு மாகாணத்தில் இயங்கிய சதொச கிளைகள் திட்டமிட்டு மூடப்பட்டன. அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டனர்.

35௦௦௦ ரூபா சம்பளத்தில் இவர்கள் வெளிமாவட்டங்களில் எவ்வாறு பணிபுரிய முடியும்? தமிழ், முஸ்லிம் என்பதனாலா இவர்கள் இவ்வாறு பழிவாங்கப்படுகின்றனர்? எனவே, மூடப்பட்டுள்ள சதொச கிளைகளை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்த வர்த்தக வாணிப அமைச்சர் ரமேஷ் பத்திரன, “நீங்கள் சொல்வது முற்றிலும் நியாயமானதாகும். இருப்பினும், நிறுவனத்தின் லாபத்தையும் கருத்திற்கொண்டு, அவற்றை மீளத் திறக்க நாம் நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்