அஸீஸுக்கான அனுதாபப் பிரேரணை: மு.கா. MPகளும், வெட்கப்படும் செய்தியும்

🕔 January 31, 2016

Asees MP - 11
– மப்றூக் –

றைந்த நாடாளுமன்ற உறுப்பினர் பொத்துவில் எம்.பி.ஏ. அஸீஸுக்கான அனுதாபப் பிரேரணையில் கலந்து கொண்டு, மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உரையாற்றாமல் தவிர்ந்து கொண்டமை குறித்து, பல்வேறு தரப்புக்களிலிருந்தும் விமர்சனங்கள் வெளியிடப்படுகின்றன.

அம்பாறை மாவட்டம் பொத்துவிலைச் சேர்ந்த முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.ஏ. அஸீஸுக்கான அனுதாபப் பிரேரணை நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

பொத்துவில் அஸீஸ் என அறியப்படும் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர், 2012 ஆம் ஆண்டு, நொவம்பர் மாதம் 05 ஆம் திகதி, அவரின் 59 ஆவது வயதில் மரணமடைந்தார்.

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அஸீஸுக்கான அனுதாபப் பிரேரணையில் கலந்து கொண்டு, எந்தவொரு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினரும் உரையாற்றவில்லை என்பது வெட்கமும், வேதனையும் நிறைந்த செய்தியாகும்.

மர்ஹும் அஸீஸ் மீதான மேற்படி அனுதாபப் பிரேரணையில் சபை முதல்வர் லக்ஷமன் செனவிரத்தன, தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் மற்றும் ஐ.ம.சு.முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன ஆகியோர் மட்டுமே உரையாற்றியிருந்தனர்.

சபையில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இருந்தபோதும், அவர்களில் எவரும் மேற்படி பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்ற முன்வரவில்லை.

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேற்படி அனுதாபப் பிரேரணையில் கலந்து கொண்டு, கட்டாயம் உரையாற்றியிருக்க வேண்டும் என்பது பலரின் கருத்தாகும்.

அம்பாறை மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் மூவரும் மு.காங்கிரஸைச் சேர்ந்தவர்களாவர்.

பிரதியமைச்சர்களான பைசால் காசிம், எச்.எம். ஹரீஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மன்சூர் ஆகியோர் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர்.

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அஸீஸ், முஸ்லிம் காங்கிரஸில் நீண்டகாலம் இருந்து சேவையாற்றியவராவார். பின்னர், அவர் மு.காங்கிசை விட்டும் விலகிச் சென்று அரசியலில் ஈடுபட்டுவந்த போதும், ஒரு சகோதரனாக அவரின் அனுதாபப் பிரேரணையில் கலந்து கொண்டு அம்பாறை மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராவது உரையாற்றியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்வதற்கு சம்பந்தப்பட்டவர்களில் எவரும் முன்வரவில்லை.

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அஸீஸுக்கான அனுதாபப் பிரேரணை சபையில் கொண்டு வரப்பட்ட தினம், முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம் நாட்டில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் உத்தேச அரசியலமைப்புத் தொடர்பில் பிரித்தானியாவில் நடைபெறும் கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு, ரஊப் ஹக்கீம் பயணமாகியிருந்தார்.

ஆயினும், குறித்த பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றுமாறு மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், அவரின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்ததாக தெரியவருகிறது.

ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் அந்தப் பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றவில்லை என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

தங்கள் சமூகத்தைச் சேர்ந்த, தங்களுடன் பணியாற்றிய ஒரு சக நாடாளுமன்ற உறுப்பினரின் மறைவுக்குப் பின்னர், அவருக்கான அனுதாபப் பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்கு முடியாத இவர்கள், இந்த சமூகத்துக்காக எதைச் செய்யப் போகிறார்கள் என்று கேட்கப்படும் கேள்விகளுக்கு, வெட்கப்படாமல் விடை சொல்வதற்கு இவர்களிடம் என்னதான் பதில் இருக்கப் போகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்