பரத நாட்டியத்தை இழிவுபடுத்திப் பேசிய மௌலவிக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் புகார்

🕔 November 16, 2023

– மரைக்கார் –

ரத நாட்டியம் குறித்து இழிவாகப் பேசிய அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஹமீட் என்பவருக்கு எதிராக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் இன்று (16) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த ‘இந்து – பௌத்த சங்க’ தலைவர் எம். மயூரதன் என்பவர் இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.

மௌலவி ஹமீட் என்பவர் – இரு மதங்களுக்கும் இனங்களுக்கும் இடையில் முறுகலை ஏற்படுத்தியதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஹமீட் என்பவர், ஆசிரியர் தின நிகழ்வுகளில் சில முஸ்லிம் ஆசிரியர்கள் நடனமாடியதாகத் தெரிவித்து, அதற்கு எதிராக கடுமையாகப் பேசி, வீடியோ ஒன்றை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில் பரத நாட்டியம் குறித்து தேவையற்ற விதத்தில் பேசிய மௌலவி ஹமீட், ‘பரத நாட்டியம் என்பது வேசைகளின் நடனம்’ என்று, மிகவும் தரக்குறைவாகவும், அந்த நாட்டியத்தை இழிவுபடுத்தும் வகையிலும் பேசியிருந்தார்.

இதனையடுத்து, மௌலவி இவ்வாறு பேசியமைக்கு எதிராக முஸ்லிம்களும், தமிழர்களும் சமூக ஊடகங்களில் கண்டனப் பதிவுகளை இட்டிருந்தனர்.

இந்த நிலையில் மௌலவி ஹமீட் இவ்வாறு பொறுப்புணர்வின்றி, சமூகங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்தும் வகையில் பேசியமை குறித்து, கடந்த 13ஆம் திகதி செய்தியொன்றை ‘புதிது’ வெளியிட்டிருந்தது.

இந்த செய்தி வெளியான மறுதினம், மௌலவி ஹமீட் – மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், தான் பரத நாட்டியத்தை இழிவுபடுத்தி பேசவில்லை என்றும், தனது சமூகத்துக்கு புத்தி சொல்லும் வகையில் – வெளிட்ட அந்த வீடியோவில், பரத நாட்டியம் தொடர்பாக பேசவேண்டி ஏற்பட்டதாகவும், அவ்வாறு பேசியதால் தமிழர்களின் மனம் புண்பட்டிருக்குமாயின், அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் மௌலவி ஹமீட் கூறியிருந்தார்.

ஆனால், அத்தோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. தான் மன்னிபுக் கோரிய வீடியோவிலும் – பரத நாட்டியம் குறித்து முன்பு பேசிய இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதோடு, அந்த நடனம் பற்றி – தான் சொன்னவை அனைத்தும் சரியாவையே எனவும் வாதிட்டார், மேலும் ‘வேசைகளின் நடனம்தான் பரத நாட்டியம்’ என்று அவர் மீண்டும் அழுத்திப் பேசியிருந்தார்.

அதாவது குளிக்கப் போய் சேறு பூசிய கதைபோல், மன்னிப்புக் கேட்கிறேன் என்று கூறி, மீண்டும் அதே தவறை மௌலவி செய்தார்

பரத நாட்டியத்தை மௌலவி ஹமீட் இவ்வாறு இழிவாக பேசியமைக்கு கண்டனம் தெரிவித்து, மட்டக்களப்பு விவேகானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவிகள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

மௌலவி அப்துல் ஹமீட் – இஸ்லாமிய பரப்புரை செய்வதாகக் கூறிக்கொண்டு வெளியிடும் அதிகமான வீடியோகளில், அவர் – தரம் குறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவதையும், ஏனைய சமூகத்தினரை இழிவுபடுத்திப் பேசுவதையும் காணக்கிடைக்கிறது.

முஸ்லிம் இளைஞர்கள் நீளமாக முடி வளர்த்து, காதில் தோடு அணிகின்றனர் எனக் குறிப்பிட்டு, அதற்கு எதிராக மௌலவி ஹமீட் பேசி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், முஸ்லிம் இளைஞர்களின் இந்தச் செயல் ‘சிங்களவனைப் போல்’ உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவரின் பேச்சில், சமயத்தைக் கற்றறிந்த ஒருவரிடம் இருக்க வேண்டிய இங்கிதம், மென்மை, நாகரீகம் போன்றவை – போகிற போக்கில் மீறப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

‘இஸ்லாமிய சமயத்தை கற்றவர்கள்’ என்கிற ‘லேபிலை’ (Label) வைத்துக் கொண்டு, இவ்வாறானவர்கள் – அடுத்த சமூகத்தை மட்டுமன்றி தமது சமூகத்தையும் கேவலமாகப் பேசுவதை – ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும், இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் போதுதான், இவரைப் போன்றவர்களை கட்டுப்படுத்த முடியும் எனவும், சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

தொடர்பான செய்தி: முஸ்லிம் – தமிழ் சமூகங்களுக்கிடையில் கசப்பை உருவாக்கும் வகையில், பரத நாட்டியத்தை இழிவாக பேசிய மௌலவி: சட்ட நடவடிக்கை வேண்டும் என அக்கறையாளர்கள் கோரிக்கை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்