முஸ்லிம் – தமிழ் சமூகங்களுக்கிடையில் கசப்பை உருவாக்கும் வகையில், பரத நாட்டியத்தை இழிவாக பேசிய மௌலவி: சட்ட நடவடிக்கை வேண்டும் என அக்கறையாளர்கள் கோரிக்கை

🕔 November 13, 2023

– மரைக்கார் –

சமூகங்களுக்கிடையில் பிணக்கையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்தும் வகையில் மௌலவி அப்துல் ஹமீட் என்பவர், சமூக ஊடகங்களில் பரத நாட்டியம் பற்றி, இழிவாக பேசியமைக்கு – முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் குறித்த நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த மௌலவி அப்துல் ஹமீட் என்பவர் – அவர் பேசி தயாரித்த வீடியோ ஒன்றினை, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார்.

ஆசிரியர் தினத்தின் போது – பாடசாலைகளில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் முஸ்லிம் ஆண் ஆசிரியர்கள் – நடனமாடியமை குறித்து, தனது வீடியோவில் கண்டித்துப் பேசியுள்ள மௌலவி ஹமீட், அந்த ஆசிரியர்களை மிகவும் மோசமாக திட்டியுமிருந்தார்.

மேலும், அந்த நிகழ்வுகளில் முஸ்லிம் ஆண் ஆசிரியர்கள் பரத நாட்டிம் ஆடியுள்ளதாக தனது வீடியோவில் பேசியுள்ள மௌலவி ஹமீட், பரத நாட்டியத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

“நீ பரத நாட்டியம் ஆடுகிறாயே, ஓர் ஆசிரியரின் ‘இமேஜை’ அது குறைக்காதா?, ஓர் ஆசிரியர் என்றால் எவ்வளவு ‘கட்ஸ்’ ஆக இருக்க வேண்டும். நீ மேடையில் ஏறி பரத நாட்டியமாடுகிறாய், அது பரத்தைகள் ‘டான்ஸ்’. பரத்தைகள் என்பவர்கள் வேசைகள். அந்தக் காலத்தில் இருந்த மன்னர்களை மகிழ்விக்க ஆடப்பட்டதுதான் பரத நாட்டியம். ‘பரத்தி நாட்டியம்’ என்பது அதுதான். மன்னர்களுக்கு முன்னால் ஆடி ‘மூட்’ உண்டாக்கும் நாட்டியம் அது. அதை ஆம்பிளை நீ ஆடுகிறாய்” என, அந்த வீடியோவில் – குறித்த மௌலவி பேசுகிறார்.

தமிழர்களின் கலாசாரத்தில் மிகவும் மதிக்கப்படும் பரத நாட்டியத்தை, இவ்வாறு மேற்படி மௌலவி இழிவாகப் பேசியதன் மூலம், அவர் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தி, அதனூடாக மோதல்களை உருவாக்குவதற்கு தூபமிட்டுள்ளார் என்றும், இது கண்டிக்கத் தக்கது எனவும் முஸ்லிம், தமிழ் சமூகங்களைச் சேர்ந்த அக்கறையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த மௌலவிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

மேற்படி மௌலவி அப்துல் ஹமீட் என்பவர் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில், இதற்கு முன்னரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மௌலவியின் பேச்சுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் வெளியான கண்டனம்
தமிழர் தரப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரி, ஃபேஸ்புக்கில் வெளியிடப்பட்ட பதிவு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்