காஸா ‘பலி’ எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இடிபாடுகளுக்குள் 02 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் அச்சம்

🕔 November 6, 2023

காஸா பகுதியில் 31 நாட்கள் இடைவிடாது நடந்து வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 10,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என, பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

காஸா சுகாதார அமைச்சு இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள ஒரு அறிக்கையில், குறைந்தது 10,022 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 4,104 குழந்தைகளாவர்.

இதேவேளை பலர் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர் என்றும், இஸ்ரேலிய முற்றுகையால் எரிபொருள், உணவு மற்றும் மின்சாரம் போன்றவற்றை பெற முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“குறைந்தது 2,000 பேர் இடிபாடுகளுக்குள் இருப்பதால் இறப்பு எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரச்சனை என்னவென்றால், கனரக உபகரணங்கள் மற்றும் இயந்திரங்கள் இல்லாததால், தரையிலுள்ள மீட்புக் குழுக்களால் இடிபாடுகளுக்கு அடியில் இருந்து உடல்களை அகற்றி வெளியே எடுக்க முடியவில்லை ”என்று அல் ஜசீரா ஊடகவியலாளர் ஹானி மஹ்மூத் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸில் இருந்து தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் குறைவாக இருப்பதால், காஸாவின் 35 வைத்தியசாலைகளில் 16 வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,000 ஐக் கடந்துள்ளது.1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதுகாஸாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களாவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்