ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகள்: வைத்தியசாலையில் ஓய்வெடுப்பதாக தெரிவிப்பு

🕔 October 24, 2023

மாஸ் சிறைப்பிடித்தவர்களில் இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நேற்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர் என, பாலஸ்தீனிய குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை தெரிவித்துள்ளன.

கட்டார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்தின் பேரில் – இரு கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

ஏற்கனவே இஸ்ரேலில் ஹமாஸ் சிறைப்பிடித்த இரண்டு அமெரிக்கப் பெண்கள் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் நேற்று விடுவித்த இரண்டு இஸ்ரேலிய பெண்கள் – டெல் அவிவ் இல் உள்ள வைத்தியசாலைக்கு வந்து – ஓய்வெடுத்து வருவதாக ‘டைம்ஸ் ஒஃப் இஸ்ரேல்’ செய்தி வெளியிட்டுள்ளது.

85 வயதான யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ் மற்றும் 79 வயதான நூரிட் கூப்பர் “தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் உணர்ச்சிகரமாக இணைந்ததனர்” என்று, வைத்தியசாலையின் தாதியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

காஸாவிற்கு வந்த பிறகு தாம் எங்கு அழைத்துச் செல்லப்பட்டோம் என்று தனக்குத் தெரியாது என்று லிஃப்ஷிட்ஸ் கூறியுள்ளார். 85 வயதான லிஃப்ஷிட்ஸ், மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்டார்.

“அவர்கள் எல்லை வேலியைக் கடந்து காஸா பகுதிக்குள் நுழைந்தார்கள், முதலில் அவர்கள் என்னை அபேசன் நகரத்தில் வைத்திருந்தார்கள், என்று கூறியுள்ள அவர்; “அதன் பிறகு, நான் எங்கு அழைத்துச் செல்லப்பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மேலும் இரண்டு பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஹமாஸின் முடிவானது, பேச்சுவார்த்தைக்கான விருப்பத்தை சுட்டிக்காட்டுவதாகவும், ஆனால் பேச்சுவார்த்தைகளுக்கான தற்போதைய சூழல் கடினமாக இருக்கலாம் என்றும் மத்திய கிழக்கு ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில், சான் பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு அரசியல் பேராசிரியரான ஸ்டீபன் சூன்ஸ், இந்த பணயக் கைதிகள் விடுவிப்பை “ஒரு நல்ல விஷயம்” என்று வரவேற்றுள்ளார்.

“ஹமாஸ் இதை ஒரு நல்லெண்ணச் செயலாகப் பயன்படுத்தி, பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறார்கள் என்பதை தெரியப்படுத்த முயற்சிக்கிறது என்பது என் கருத்து. இஸ்ரேல் நிச்சயமாக ஆயிரக்கணக்கான [பலஸ்தீனிய] அரசியல் கைதிகளை வைத்திருக்கிறது, அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வன்முறையற்றவர்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்