பலஸ்தீன தூதுவரை சந்தித்த மஹிந்த ராஜபக்ஷ: முஸ்லிம் வாக்குகளுக்கு வழியெடுக்கிறாரா?

🕔 October 17, 2023

– மரைக்கார் –

ஸ்ரேல் – பலஸ்தீன மோதல் கடுமையாக நடைபெற்று வரும் நிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ – நேற்று (16) இலங்கைக்கான பஸ்தீன தூதுவரைச் சந்தித்து, தான் பலஸ்தீன மக்களுடன் உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையிலுள்ள பலஸ்தீனத் தூதரகத்துக்கு சென்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ, பலஸ்தீன – இலங்கை நட்புறவு சங்கத்தின் ஸ்தாபகராகவும் தலைவராகவும் தான் செயற்பட்டமை தொடர்பில் நினைவுபடுத்தியதோடு, பலஸ்தீன நோக்கத்தை தொடர்ந்து ஆதரித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இலங்கையில் முஸ்லிம்களை மிக மோசமாகக் கொடுமைப்படுத்தியது மஹிந்த ரஜபக்ஷவின் தம்பி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம்தான் என்பதை மறக்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியில்தான் முஸ்லிம்களுக்கு எதிரான திட்டங்கங்கள் தொடங்கின.

கொவிட் காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு – கோட்டா அரசாங்கத்தில் உத்தரவிடப்பட்டபோது, அதனைச் செய்ய வேண்டாம் என, மஹிந்த வாய் திறக்கவில்லை.

ஈஸ்டர் தாக்குதல் நடந்த பின்னர் – முஸ்லிம்களின் வீடுகளுக்குள், பள்ளிவாசல்களுக்குள் நாய்களுடன் பாதுகாப்புத் தரப்பினர் சென்று தேடுதல் நடத்தி, சமயலறைக் கத்தி வைத்திருந்தவர்களைக்கூட கைது செய்த போதும், தனது நாட்டு முஸ்லிம்களுக்காக மஹிந்த வாய் திறக்கவில்லை.

அந்தக் காலகட்டத்தில் முஸ்லிம்கள் குர்ஆனை வைத்திருப்பதற்கும், அரபு மொழியில் எழுதப்பட்ட சமய நூல்களை வைத்திருப்பதற்கும் பயந்து – அவற்றை ஒளித்து வைத்திருந்தமை மறக்க முடியாதது. அப்போது கூட முஸ்லிம்கள் மீது மஹிந்தவுக்கு கருணை பிறக்கவில்லை.

இப்படியெல்லாம் செய்து, முஸ்லிம் வெறுப்பாளர்களை குதூகலிக்க வைத்து, அதனூடாக சிங்களவர்களின் ஜனாதிபதியாக ராஜபக்ஷக்கள் வலம்வரலாம் என்று மஹிந்த நம்பியிருக்கலாம்.

ஆனால், இரண்டு வருடங்களுக்குள் கோட்டாவின் ஆட்சி தவிடுபொடியானது.

இதற்குப் பிறகுதான், மஹிந்த, அவரின் மகன் நாமல் போன்ற ராஜபக்ஷவினருக்கு முஸ்லிம்கள் மீது கருணை சுரக்கத் தொடங்கியுள்ளது. இந்தக் கருணை அரசியலுடன் தொடர்புடையது. முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்கு வழியெடுப்பதற்கானது.

பொதுஜன பெரமுனவின் ஆதரவில் ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்ரமசிங்க, இஸ்ரேல் மீதான பலஸ்தீன ஹமாஸ் போராளிகளின் தாக்குதலை – இலங்கை அரசாங்கம் கண்டிப்பதாகக் கூறியுள்ளார். ஆனால் ரணிலை ஜனாதிபதியாக வைத்திருக்கும் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ – பலஸ்தீன தூதுவரைச் சந்தித்து, தான் பலஸ்தீன மக்களுடன் இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

இந்த விவகாரத்தில் மஹிந்த நேர்மையாக இருப்பதை உறுதி செய்வதென்றால், அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுத்து – இலங்கை அரசாங்கத்தின் ஆதரவை பலஸ்தீனுக்கு வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.

கடந்த 07ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல், நீருக்குள் அமுக்கி வைக்கப்பட்டிருந்த காற்றடைத்த பந்தொன்று – ஒரு கட்டத்தில் திடீரென மேலெழுவதற்கு ஒப்பானதாகும். பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்தி வரும் ஆக்கிரமிப்பு, அடக்குமுறை மற்றும் தாக்குதல்களுக்கு பதிலடியாகவே ஒக்டோபர் 07ஆம் திகதியன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலை பார்க்கவேண்டியுள்ளது.

அப்போதெல்லாம் இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக – இப்போதைய இலங்கை அரசாங்கம் தனது கண்டனத்தை வெளிப்படுத்தவில்லை. ஆகக்குறைந்தது, இப்போது காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரைப் பகுதிகளில் இஸ்ரேல் நடத்தும் காட்டுமிராண்டித் தாக்குதல்களுக்கு எதிராகக் கூட, ரணில் அரசாங்கம் மூச்சு விடவில்லை.

இந்த லட்சணங்களின் பின்னணியில்தான் பலஸ்தீன தூதுவரை சந்தித்து, பலஸ்தீன முஸ்லிம்கள் மீது – தான் வைத்துள்ள அன்பு, கருணை, ஆதரவு குறித்தெல்லாம் மஹிந்த ராஜபக்ஷ பேசியிருக்கிறார். மஹிந்தவின் இந்த ஆதரவு பலஸ்தீன சண்டைக் களத்தில் ஒரு துரும்பைக் கூட நகர்த்தப்போவதில்லை என்பதை மஹிந்தவே அறிவார்.

பலஸ்தீன தூதுவரைச் சந்தித்து அந்த நாட்டு மக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்திய மஹிந்த ராஜபக்ஷவின் இந்த செயற்பாடானது, இலங்கை முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற வழியெழுக்கும் அப்பட்டமான அரசியல் முயற்சியாகவே பார்க்க முடிகிறது.

ஆனால், மஹிந்தவின் இந்த கொரளி வித்தையை புரிந்து கொள்ள முடியாதளவு யாரும் இங்கு இல்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்