நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு உத்தரவு

🕔 October 2, 2023

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா பதவி விலகுவதற்கு காரணமான சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

நீதிபதியின் ராஜினாமா மற்றும் அவர் நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அமைச்சர் டிரான் கூறியுள்ளார்.

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு செப்டெம்பர் 23 திகதியிட்டு அனுப்பிய கடிதத்தில் – மாவட்ட நீதிபதி, நீதவான், குடும்ப நீதிமன்ற நீதிபதி, முதன்மை நீதிமன்ற நீதிபதி, சிறு கோரிக்கை நீதிமன்ற நீதிபதி மற்றும் சிறார் நீதிமன்ற நீதிபதி ஆகிய பதவிகளில் இருந்து விலகுதாக அறிிவித்திருந்தார்.

அந்தக் கடிதத்தில் நீதிபதி சரவணராஜா – குருந்தூர் மலை வழக்கை சுட்டிக்காட்டி தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டமையினாலும் மன அழுத்தம் காரணமாகவும் இந்த தீர்மானம் எடுத்ததாக குறிப்பிட்டிருந்தார்.

குருந்தூர் மலையில், பழமையான இந்துக் கோவிலில் எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனத் தடை விதித்து ஜூன் 2022 இல் நீதவான் சரவணராஜா உத்தரவு பிறப்பித்திருந்தார்.

குருந்தூர் மலை வழக்கு தொடர்பான தனது தீர்ப்பையடுத்து, தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகவும் அரச அதிகாரிகளின் தேவையற்ற அழுத்தங்களை எதிர்கொண்டதாகவும் சுட்டிகாட்டி நீதிபதி சரவணராஜா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்த பின்னர், நாட்டை விட்டும் வெளியேறியதாக கூறப்படுகிறது.

அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இலங்கையில் உள்ள பல சட்டத்தரணிகள் சங்கங்கள், அரசின் நீதித்துறைக்கு உள்ள அச்சுறுத்தலை சுட்டிக்காட்டியுள்ளதோடு, குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்