துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 44 பேர் பலி

🕔 September 22, 2023

நாட்டில் நடந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவங்களால் இவ்வருடத்தின் கடந்த மாதங்களில் மொத்தம் 44 உயிர்கள் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போது அவர் இதனைக் கூறினார். அவற்றில் பெரும்பாலானவை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக் குழு உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் தாக்குதல்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு நற் பிரஜைகளின் ஆதரவு மிகவும் அவசியமானது என, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பாணந்துறையிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி பொலிஸ் மா அதிபர் தென்னகோன், குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்கு போதைப்பொருள் பாவனையே பிரதான காரணம் எனக் குறிப்பிட்டதோடு, குற்றப் பயத்தை இல்லாதொழிப்பது பொலிஸாரின் பொறுப்பாகும் என்றார்.

போதைப் பழக்கத்தால் ஏற்படும் அறிவாற்றல் சிதைவின் விளைவாக மக்கள் திருட்டு, கொள்ளை மற்றும் கொலைகளைச் செய்ய முனைகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

புதன்கிழமை (செப். 20) இரவு அவிசாவளை, தல்துவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியில் பயணித்த 4 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அடுத்து இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. அந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் இருவர் பலியாகினர், மற்ற இருவரும் படுகாயமடைந்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு தாக்குதல்காரர்கள் T-56 துப்பாக்கியால் பாதிக்கப்பட்டவர்களை நோக்கி கிட்டத்தட்ட 25 துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது துபாயில் தலைமறைவாக இருக்கும் பிரபல குற்றவாளி ‘மன்னா ரமேஷ்’ என்பவரே இந்தச் துப்பாக்கிச் சூட்டினை பின்னணியிலிருந்து நடத்தியதாக பொலிஸார் நம்புகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்