ஜனாதிபதி தேர்தல்: ராஜபக்ஷவினர் முடிவு என்னவாக இருக்கும்?

🕔 April 29, 2024

– மரைக்கார் –

ரசியலமைப்பின் படி – இந்த வருடம் ஒக்டோபர் மாதத்துக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்தத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக இருப்பார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது உடைந்து கிடப்பதால், அந்தக் கட்சியிலிருந்து களமிறங்கும் வேட்பாளரை கவனத்தில் கொள்ளும் தேவை ஏற்படாது.

மேலே குறிப்பிட்ட வேட்பாளர்களில் – பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் என, எவரையும் நாம் குறிப்பிடவில்லை என, நீங்கள் யோசிக்கக் கூடும். அது பற்றிப் பேசுவதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிரித்தெடுத்து, தன் பக்கமாக சேர்க்கும் வேலையை தற்போது ரணில் விக்ரமசிங்க கச்சிதமாாகச் செய்து வருகின்றார். எடுத்துக்காட்டாக, ”ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்” என்று, பொதுஜன பெரமுனவின் முக்கிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பகிரங்கமாக தெரிவித்து வருகின்றமையை இங்கு குறிப்பிடலாம்.

இந்த நிலையில் பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு, ராஜபக்ஷ தரப்பில் தகுதியான எவரும் இல்லை. அரசியலமைப்பின் படி ஜனாதிபதியாக ஒருவர் மூன்றாவது தடவை பதவி வகிக்க முடியாது என்பதால் – மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க முடியாது. இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால் பசில் ராஜபக்ஷவும் வேட்பாளராக களமிறங்குவதற்கு தடை உள்ளது.

“நாமல் ராஜபக்ஷ – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது” என்று, மஹிந்த ராஜபக்ஷவே கூறிவிட்டார். அதனால், இப்போதைக்கு நாமலும் களமிறங்க மாட்டார்.

அப்படியென்றால் வேறு யாராவது ஒருவரைத்தான் ஜனாதிபதி வேட்பாளராக பொதுஜன பெரமுன களமிறக்க வேண்டும். அந்த ‘யாராவது ஒருவர்’ யார் என்பதுதான் இங்கு கேள்வியாக உள்ளது.

‘அரகலய’ எனும் மக்கள் போராட்டத்தின் பின்னர் – பொதுஜன பெரமுனவுக்கான ஆதரவு வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலையில் ராஜபக்ஷ தரப்பிலிருந்து ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் கூட, அவர் வெற்றி பெறுவது மிகவும் கடினமாகும். அவ்வாறான நிலையில், ராஜபக்ஷ அல்லாத ஒருவரை – ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன களமிறக்கினால் நிச்சயம் அந்த நபர் தோல்லி அடைவது நிச்சயம்.

அப்படியென்றால் பொதுஜன பெரமுன வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி தேர்தலிலும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தோல்வியடைவதென்பது, அந்தக் கட்சியை நீண்ட காலத்துக்கு மீண்டெழ முடியாத நிலைக்குக் கொண்டு சென்று விடும். இதனை ராஜபக்ஷவினரும் அறிவர்.

எனவே, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுன் கூட்டு வைத்து, அவருக்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவைக் கொடுத்து, அவரை வெற்றிபெறச் செய்வதற்கு ராஜபக்ஷவினர் முயற்சிக்கக் கூடும். அதன் மூலம் ரணிலின் வெற்றியை தமது வெற்றியாக அவர்கள் காட்டுவார்கள். தமது ஆதரவினால்தான் ரணில் வெற்றி பெற்றதாக பிரசாரம் செய்வார்கள்.

அப்படி நடந்தால், அந்த நிலைவரமானது பொதுஜன பெரமுன என்கிற கட்சிக்கு பேராபத்தாக அமையும். மீண்டும் ஜனாதிபதியாக ரணில் தெரிவுசெய்யப்பட்டால், பொதுஜன பெரமுன என்கிற கட்சியை சுக்கு நூறாக ரணில் உடைப்பதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது. பிறகு – ராஜபக்ஷவினருக்கு ‘கட்சியே இல்லை’ என்கிற நிலைவரம் கூட ஏற்படலாம்.

மறுபுறமாக, ரணிலுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன ஆதரவளிக்காமல் – யாரோ ஒரு வேட்பாளரைக் களமிறக்கி, அந்த வேட்பாளர் தோற்றுப் போனாலும் கூட, ராஜபக்ஷவினருக்கு ‘பொதுஜன பெரமுன’ என்கிற கட்சி – கையில் இருக்கும். அந்தக் கட்சி இப்போதைக்கு வீழ்ந்து போயிருந்தாலும், அதனை மீட்டெடுத்து – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் – அந்தக் கட்சி சார்பாக நாமல் ராஜபக்ஷ வேட்பாளராகக் களமிறங்கவும் முடியும்.

அதாவது, வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு வழங்கி – கட்சியை காவு கொடுப்பதா? அல்லது தமது கட்சி சார்பில் யாரையாவது களமிறக்கி தோற்றுப் போனாலும், கட்சியை உடைந்து போகாமல் காப்பாற்றுவதா? என்கிற இரண்டு தெரிவுகள் – ராஜபக்ஷவினர் முன்னால் உள்ளன.

இப்போதைக்கு நீண்ட காலத் திட்டங்களைக் கருத்திற் கொண்டு ராஜபக்ஷவினரால் யோசிக்க முடியாது. அடுத்த தேர்தலில் ரணில் தவிர்ந்த எவர் ஜனாதிபதியானாலும், அது – ராஜபக்ஷவினருக்கு அரசியலில் மட்டுமன்றி தனிப்பட்ட ரீதியிலும் பெரும் ஆபத்தாகவே அமைவதற்கான சாத்தியம் உள்ளது. ராஜபக்ஷவினரின் கிடப்பில் கிடக்கும் முக்கியமான வண்டவாளங்கள் கிளறப்படும். எனவே, இப்போதைக்கு அவ்வாறானதொரு நிலையிலிருந்து தப்புவதுதான் ராஜபக்ஷவினரின் முதல் தெரிவாக அமையும்.

எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளரைக் களமிறக்காமல், ரணில் விக்ரமசிங்கவுக்கே ராஜபக்ஷவினர் ஆதரவளிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்