புகையிரத கூரையிலிருந்து விழுந்து மரணித்தவருக்கு 05 லட்சம் ரூபாய் நஷ்டஈடு
புகையிரதத்தின் மேற்கூரையில் பயணித்தபோது நேற்று (12) தவறி விழுந்து உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 500,000 ரூபாய் வழங்கப்படும் என இலங்கை புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன இதனை இன்று புதன்கிழமை (13) உறுதிப்படுத்தினார்.
புகையிரத திணைக்கள ஊழியர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று புகையிரத போக்குவரத்துகள் குறைவாகவே இருந்தன. இந்த நிலையில் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலின் கூரையில் பயணித்த 18 வயது இளைஞர் ஒருவர் நேற்று காலை தவறி விழுந்து உயிரிழந்தார்.
ஹொரேபே புகையிரத நிலையத்தின் உச்சியில் மோதுண்டு – குறித்த இளைஞன் புகையிரத கூரையில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
புகையிரத சாரதிகளில் ஒரு சாரார் – திங்கள்கிழமை (11) நள்ளிரவு தொடக்கம் பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சாரதிகள் தொழிற்சங்க வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்பான செய்தி: புகையிரத கூரையில் பயணித்தவரின் மரணத்துக்கான பொறுப்பை, வேலை நிறுத்தக்காரர்களே ஏற்க வேண்டும்