புகையிரத கூரையில் பயணித்தவரின் மரணத்துக்கான பொறுப்பை, வேலை நிறுத்தக்காரர்களே ஏற்க வேண்டும்

🕔 September 12, 2023

புகையிரத வேலைநிறுத்தம் காரணமாக நெரிசல் மிகுந்த புகையிரதத்தின் கூரையில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்தமைக்கான பொறுப்பை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள புகையிரத ஊழியர்களே ஏற்க வேண்டுமென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (12) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைக் கூறியதோடு, சந்திப்பு ஆரம்பிப்பதற்கு முன்னர் அமைச்சரும் புகையிரத சிரேஷ்ட அதிகாரிகளும் – உயிரிழந்த இளைஞருக்கு இரங்கல் தெரிவித்தனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 84 புகையிரத ஊழியர்கள் இளைஞர்களின் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி வந்த புகையிரதத்தின் கூரையில் பயணித்த 20 வயதுடைய இளைஞன் இன்று காலை ஹொரேப்பே புகையிரத நிலையத்தின் கூரையில் மோதி கீழே விழுந்து உயிரிழந்தார்.

கம்பஹா – மொரகொட பகுதியைச் சேர்ந்த மொரட்டுவ பல்கலைக்கழக மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புகையிரத ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக குறைந்தது 20 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

இந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று நள்ளிரவு முதல் – புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக கூறினார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்