மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அமைச்சரவை அனுமதி

🕔 September 11, 2023

லங்கையில் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

தற்போதுள்ள மருத்துவ பீடங்களின் தரத்திற்கு அமைவாக – இந்த புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“மூன்று புதிய மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போதுள்ள மருத்துவ பீடங்களின் தரத்திற்கு ஏற்ப – இந்த புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட வேண்டும். நமது நாட்டு மாணவர்களில் பலர் வெளிநாடுகளுக்கு கல்வி கற்கச் செல்கின்றார்கள். நமது நாட்டு மாணவர்களுக்குத் தேவையான வசதிகளையும் வாய்ப்புகளையும் இந்நாட்டில் வழங்காமல் இருப்பது அவர்களுக்கு நாம் இழைக்கும் அநீதி ஆகும்.

நமது நாட்டின் மருத்துவக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாகவும் ஆலோசகர்களாகவும் பணியாற்றியவர்களே இங்கும் பணியாற்றுவார்கள். அவர்களுக்கு குறைந்தபட்ச தகுதிகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட ஏனைய மருத்துவ பீடங்களின் தரத்திற்கு அல்லது அதற்கு அப்பால் இன்னும் அதிக தரத்துடன் இந்த மருத்துவக் கல்லூரிகள் இருக்க வேண்டும் என்று ஒரு சட்டத்தை முன்மொழிந்துள்ளோம். மேலும், அந்தக் கல்லூரிகளுக்கு மூன்று மருத்துவமனைகளும் இணைக்கப்படவுள்ளன.

உயர்கல்விக்காக ஒவ்வொரு துறைகளுக்கும் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதற்காக அரச வர்த்தமானி மூலம் குறைந்தபட்ச தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

நாட்டில் சுமார் 13 மருத்துவ பீடங்கள் உள்ளன. அதற்கு சுமார் 2000 மாணவர்கள் மாத்திரமே உள்வாங்கப்படுகின்றார்கள். உண்மையில் நமது நாட்டு மாணவர்களின் அறிவு தொடர்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை. அடிப்படைத் தகுதிகளைக் கொண்ட மாணவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

இந்தத் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இணையும் மணவர்களில், 10% மாணவர்களுக்கு கல்விப் புலமைப்பரிசில்களை வழங்குமாறும் இந்தப் பல்கலைக்கழகங்களிடம் தனிப்பட்ட முறையில் கோரப்பட்டுள்ளன.

தகுதி இருந்தும் மருத்துவம் படிக்க முடியாதோர் உள்ளனர்

அடிப்படைத் தகுதிகள் இருந்தும், தொடர்ந்தும் மருத்துவப் படிப்பைத் தொடர முடியாத மாணவர்கள் இந்நாட்டில் உள்ளனர். எனவே அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று தமது உயர்கல்வியைத் தொடர்ந்தால் அதற்கும் எமது நாட்டுப் பணமே செலவிடப்படுகின்றது. அதனால் குறைந்த பட்ச தகுதிகளைப் பெறும் மாணவர்களுக்கு எமது நாட்டிலேயே மருத்துவப் படிப்பைத் தொடரும் வாய்ப்பு இதன் மூலம் ஏற்படுகின்றது.

மருத்துவர்கள் உட்பட பொதுவாக புத்தி ஜீவிகள் வெளியேற்றம் என்பது சுகாதாரத் துறையில் உள்ள சில குறைபாடுகளால் நடப்பது அல்ல. இதற்கு முக்கிய காரணம், 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளதார நெருக்கடியான சூழ்நிலையில், நாட்டின் பொருளாதார சிக்கல்களைத் தீர்க்க பல்வேறு வழிகளில் வரிகளை விதிக்க வேண்டியிருந்தது. அதன் மூலம் அவர்களின் வருமானம், எரிபொருளுக்கு செலவிட வேண்டிய பணம் மற்றும் அவர்களின் பொது ஊதியம் ஆகியவை குறித்து கேள்விகள் எழும்பின. எனவே இவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல தீர்மானிக்கின்றனர்.

மேலும், நாட்டில் குறைந்த எண்ணிக்கையிலான வைத்தியர்களே தனியார் சிகிச்சை நிலையங்களில் சேவைகளில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு சந்தர்ப்பங்களில் மருத்துவர்களின் பொதுவான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தினார். மேலும் அடுத்த வரவு – செலவுத் திட்டத்திற்குப் பிறகு இதற்கான தீர்வுகளை வழங்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அரசாங்கம் என்ற வகையில் தற்போதைய பொருளாதார நெருக்கடியான நிலையிலும் கூட அவர்களுக்கு என்ன விடயங்களைச் செய்து கொடுக்க முடியுமோ அவற்றை நாம் நிறைவேற்றி இருக்கின்றோம்.

இந்தப் பிரச்சினைகளுக்கு குறுகிய, இடைக்கால மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை வழங்கக் கூடிய திட்டங்களைத் தயாரிக்க எதிர்பார்த்துள்ளோம். இங்கிலாந்து போன்ற நாடுகளில் வழங்கப்படும் சம்பளம், நம் நாட்டை விட பத்து மடங்கு அதிகமாக இருக்கலாம். ஆனால் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன். நம் நாட்டில் இலவசக் கல்வியில் பல வருடங்கள் கல்வி கற்றவர்களுக்கே இங்கிலாந்து போன்ற நாடுகள் பத்து மடங்கு அதிக ஊதியம் வழங்குகின்றது. ஏனென்றால், அவர்கள் ஆரம்பக் கல்வியில் இருந்து உயர்கல்வி வரை இவர்களுக்காக பணம் செலவழிக்கவில்லை என்பதால் இவ்வாறு அதிக ஊதியம் வழங்க முடியும்.

மேலும், என்மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. இதற்கு முன்னர் ஏனைய அமைச்சர்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அனைத்து நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் தோற்கடிக்கப்பட்டுள்ளன. எண் கணிதத்தால் நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைத் தோற்கடிக்க முடிந்தாலும் கூட, அதன்போது முன்வைக்கப்பட்ட பல்வேறு சிறந்த விடயங்கள் குறித்து எனது அவதானத்தை செலுத்தியுள்ளதுடன், அவை தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அவசியமான பணிகளை மேற்கொள்ளவும் நட்டிவடிக்கை எடுத்துள்ளேன்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டதால், பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எழுத்து மூலமான ஆதாரங்களுடன் கூடிய உண்மைகளை முன்வைக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்” என்றார்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்