மொராக்கோ நிலநடுக்கம்; குடும்பத்தில் 10 பேரை இழந்த ஹவுடா அவுட்சாஃப்: மொத்த உயிரிழப்பு 02 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல்

🕔 September 10, 2023

மொராக்கோவில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் காரணமாக ஹவுடா அவுட்சாஃப் என்பவர் தனது குடும்பத்தில் 10 பேரை இழந்து துயரத்தில் தவித்து வருகின்றார்.

“என் குடும்பத்தினரில் 10 பேர் உயிரிழந்துவிட்டனர். இரண்டு நாட்களுக்கு முன்புதான் நான் அவர்களுடன் இருந்தேன். இப்போது அவர்கள் இறந்துவிட்டனர் என்பதை நம்ப முடியவில்லை” என அவர் பிபிசியிடம் வேதனையுடன் கூறியுள்ளார்.

வட ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான மொராக்கோவில் மக்கள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த நள்ளிரவு நேரத்தில் அவர்களை உலுக்கும் விதமாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 6.8 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மக்கள் பதறியடித்து தங்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடினர்.

உள்ளூர் நேரப்படி 23:11 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, 19 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000-ஐ தாண்டியுள்ளது. 1,400க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மராகேஷில் அதிக மக்கள் உயிரிழந்துள்ளனர். மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமாக அறியப்படும் இங்கு, கடந்த ஆண்டு மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

“மராகேஷில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் சத்தம் ஒரு போர் விமானத்தின் சத்தத்தைப் போன்று இருந்தது” என மினா மெட்டியூய் என்பவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

Comments