சரத் வீரசேகரவுக்கு எதிராக வடக்கில் சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டம்

🕔 August 25, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர – அண்மையில் நாடாளுமன்றில் முல்லைத்தீவு நீதவான் தொடர்பில் தெரிவித்த கருத்தைக் கண்டித்து வடக்கு மாகாணத்தின் பல்வேறு இடங்களில் சட்டத்தரணிகள் கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடந்த 22ஆம் திகதி அன்று முல்லைத்தீவு நீதவான் தொடர்பாக மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி நாடாளுமன்றில் உரையாற்றியதோடு, அவர் தொல்பொருள் கட்டளைச் சட்டத்தை மீறியுள்ளதாகவும் குற்றஞ்சுமத்தினார்.

இந்த உரையைக் கண்டித்து இன்று (25) காலை யாழ்ப்பாண நீதிமன்ற கட்டடத்துக்கு முன்பாக சட்டத்தரணிகள் கவனஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரையைக் கண்டித்து வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களிலும் சட்டத்தரணிகள் இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சரத் வீரசேகர கூறியது என்ன?

நாடாளுமன்றத்தில் கடந்த 22ஆம் திகதி உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு முல்லைத்தீவு நீதவான் அனுமதி அளித்ததன் மூலம், தொல்பொருள் கட்டளை சட்டத்தை அவர் மீறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

“முல்லைதீவு நீதவான் குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வை நடத்துவதற்கு அனுமதி வழங்கினார். இது வெள்ளவத்தை சிவன் கோவிலில் பிரித் பாராயணம் நடத்துவதற்கு கல்கிஸை நீதவான் அனுமதி வழங்குவதற்கு ஒப்பானதாகும்” எனவும் அவர் கூறினார்.

“குறித்த நீதவான், மனநோயினால் பாதிக்கப்பட்டவர். இதனை அவரின் மனைவியே கூறியுள்ளார். அத்தகைய ஒருவர் எப்படி நீதிவானாக செயற்பட முடியும்” எனவும், தனது உரையில் சரத் வீரசேகர கேள்வியெழுப்பியிருந்தார்.

தொடர்பான செய்தி: முல்லைத்தீவு நீதவான் தொல்பொருள் கட்டளை சட்டத்தை மீறியுள்ளார் என, சரத் வீரசேகர எம்பி குற்றச்சாட்டு: நீதவானின் மனநலம் தொடர்பிலும் சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்டார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்